சிவகுமாருக்கு மக்கள் கடைசி வாய்ப்பு: அமைச்சர் குமாரசாமி
சிவகுமாருக்கு மக்கள் கடைசி வாய்ப்பு: அமைச்சர் குமாரசாமி
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 11:34 PM
பெங்களூரு: ‘‘சிசுபாலனுக்கு 101 தவறுகள் செய்ய கிருஷ்ணர் வாய்ப்பு அளித்ததை போல, மாநில மக்களும் முதல்வர் சிவகுமாரின் தவறுகளை கவனித்து, அவருக்கு கடைசி வாய்ப்பு வழங்கி உள்ளனர்,’’ என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எல்லை மீறிய பேராசை, நிலத்தின் மீதான தணியாத தாகம், கடவுள் கொடுத்தது போதாது என்பது போன்ற உணர்வுகள், மேலும் வேண்டும் என்ற ஆசை, ஒருவரை தவறுக்கு மேல் தவறு செய்ய துாண்டுகிறது. இதே தான் நம் மாநில முதல்வரின் கதை.
சிசுபாலனுக்கு 101 தவறுகள் செய்ய கிருஷ்ணர் வாய்ப்பு அளித்ததை போன்று, மாநில மக்களும் முதல்வர் சிவகுமாரின் தவறுகளை கவனித்து, அவருக்கு கடைசி வாய்ப்பு வழங்கி உள்ளனர்.
இப்போது அவரது நில தாகத்தால், முழு நைஸ் சாலை திட்டமும் விழுங்கப்படும் அபாயத்தில் உள்ளது. அவர், ஹைதராபாத் தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து முழு திட்டத்தையும் வாங்க போகிறார்.
நைஸ் சாலை ஒப்பந்தம் அடுத்தாண்டு முடிவடையும். அப்போது நைஸ் சாலை முழுதுமாக அவருக்கு சொந்தமாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
