/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குரங்கு காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதி சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு
/
குரங்கு காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதி சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு
குரங்கு காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதி சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு
குரங்கு காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதி சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு
ADDED : டிச 16, 2025 05:19 AM
ஷிவமொக்கா: மலைப்பகுதி மாவட்டமான ஷிவமொக்காவில், குரங்கு காய்ச்சல் பரவுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நோயை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.
ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின், சோனலே கிராமத்தில் ஒருவருக்கும், பிள்ளூடி கிராமத்தில் ஐந்து பேருக்கும், குரங்கு காய்ச்சல் தென்பட்டுள்ளது.
இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். குரங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால், சுகாதாரத்துறை உஷாராகியுள்ளது. நோய் பாதிப்புள்ள கிராமங்களில் முகாமிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆய்வு தீவிரம் இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சோனலே கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சில கிராமங்களில் குரங்கு காய்ச்சல் தென்படுகிறது. எனவே பஞ்சாயத்தின் அனைத்து கிராமங்களிலும், வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என்பதை, ஆய்வு செய்கிறோம். ஒருவேளை காய்ச்சல் இருந்தால், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று, ரத்த பரிசோதனை நடத்தப்படுகிறது. தினமும் அவர்களின் உடல் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையங்கள், சமுதாய பவன்கள், வயல்களின் அருகில், குரங்கு காய்ச்சல் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஆங்காங்கே பேனர் கட்டப்பட்டுள்ளது.
பொதுவாக ஜனவரியில், குரங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு நவம்பரிலேயே நோய் தென்பட்டுள்ளது.
நோய் வேகமாக பரவுவதை தடுப்பதுடன், நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கிறோம். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்களின் ரத்தத்தை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்புகிறோம்.
கிருமி நாசினி வனப்பகுதியில் விபத்திலோ அல்லது சண்டையிட்டு கொண்டோ குரங்குகள் இறந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். குரங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனை நடத்தி, அவற்றின் இறப்புக்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்கிறோம். குரங்குகள் இறந்த இடங்களில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
குரங்கு காய்ச்சலுக்கு, குறிப்பிட்ட சிகிச்சை ஏதும் கிடையாது. நோய் பரவாமல் தடுப்பது, முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டுமே, இதற்கான சிகிச்சையாகும். வனப் பகுதிக்கு சென்று வந்தவுடன், அணிந்துள்ள உடைகளை கழற்றி வெந்நீரில் நனைக்க வேண்டும். நன்றாக குளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

