அதிக குடிநீர் கட்டண பில் கண்டித்து மக்கள் போராட்டம்
அதிக குடிநீர் கட்டண பில் கண்டித்து மக்கள் போராட்டம்
UPDATED : நவ 27, 2026 12:00 AM
ADDED : நவ 26, 2026 08:40 PM
ராம்நகர்: ஏழைகள் எப்படி வாழ்வது என, கேள்வி எழுப்பி, ராம்நகர் மாவட்டத்தில், குடிநீர் கட்டணம் உயர்வை கண்டித்து, மக்கள் போராட்டம் நடத்தினர்.
ராம்நகர் மாவட்டத்தில் திடீரென குடிநீர் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன், 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை, குடிநீர் பில் வந்தது. இந்த மாதம் 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பில் வந்துள்ளது. சில வீடுகளுக்கு 4,000 ரூபாய் பில் வந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து, குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘ஏற்கனவே அரிசி, பருப்பு, உணவு தானியங்கள், பால், தயிர் என, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குடிநீர் கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்தினால், நாங்கள் எப்படி வாழ்வது... வாடகை வீட்டில் வசிப்போரின் கதி என்னவாகும். இவ்வளவு தொகையை செலுத்துவது எப்படி’ என, கேள்வி எழுப்பினர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மக்கள் குடிநீரை மிதமாக பயன்படுத்துவது இல்லை. மாறாக தேவையின்றி அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதற்கு மீட்டர் இல்லை. இப்போது தினமும், 24 மணி நேரம், குடிநீர் சப்ளை செய்ய மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீட்டரை பார்த்து மக்கள் பயன்படுத்திய நீரின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் பில் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
