/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடவுளை சங்கிலியால் கட்டி வைத்து பூஜிக்கும் மக்கள்
/
கடவுளை சங்கிலியால் கட்டி வைத்து பூஜிக்கும் மக்கள்
ADDED : ஜூலை 29, 2025 01:42 AM

நம் நாடு, பல நம்பிக்கைகள், வழிபாடுகள், சம்பிரதாயங்களை பின்பற்றும் நாடாகும். இங்குள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும், சுவாரஸ்யமான கதைகள் உள்ளன. அத்தகைய ஒரு கோவில் சிக்கமகளூரில் உள்ளது. இது விசித்திரமான கோவிலாகும்.
சிக்கமகளூரு மாவட்டம், கடூரு தாலுகாவின், சகராயபட்டணாவில் கெஞ்சராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பொதுவாக கடவுள் சிலைகளை தங்கம், வைர நகைகளால் அலங்கரித்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், கெஞ்சராய சுவாமி சிலையை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.
இந்த சங்கிலியை அவிழ்த்தால், கோவில் அருகில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற அய்யனகெரே ஏரி, வறண்டுவிடும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும்.
கெஞ்சராய சுவாமி கோவில் அருகில் உள்ள ஏரி, கர்நாடகாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். 2,036 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி சுற்றுப்புற கிராமங்களின் மக்கள் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டது.
ஏழு மலைகளை தன்னுள்ளே மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் வரலாறு உள்ளது. இங்கு குடிகொண்டுள்ள கெஞ்சராய சுவாமி, ஒரு முறை பசியால் ஏரி நீரை சில நிமிடங்களில் குடித்து காலி செய்துவிட்டாராம். இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டனராம். அப்போது கோடை வந்ததால், குடிநீருக்கு அலைபாய்ந்தனர்.
எனவே தண்ணீரை குடிக்கவிடாமல், சுவாமியை இரும்பு சங்கலியால் கட்டிவைத்து பூஜிக்கின்றனர். சங்கிலியை அவிழ்த்தால், ஏரியை ஒரே நாளில் காலி செய்துவிடுவார் என, இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
எனவே இப்போதும் கடவுள் சிலையை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்தே அன்றாட பூஜைகள் நடக்கின்றன. 400 ஆண்டுகளாக இதே நடைமுறை உள்ளது. இத்தகைய கோவிலை வேறு எங்கும் காண முடியாது.
சிக்கமகளூரு மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தரிசனம் செய்கின்றனர். இவரை தரிசனம் செய்தால், வாழ்க்கையை வாட்டும் கஷ்டங்கள் விலகி ஓடும். மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். கோவிலின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ளும் பலர், இங்கு தேடி வருகின்றனர். பிரார்த்தனை செய்கின்றனர்.
இன்று அறிவியல் வியக்கத்தக்க வகையில் மாறியுள்ளது. டிஜிட்டல் மயமாகியுள்ளது. உலகமே உள்ளங்கையில் அடங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும், 400 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கை மாறவே இல்லை. இதுவே ஆன்மிகத்தின் சிறப்பு.
- நமது நிருபர் -