ADDED : ஜூன் 12, 2026 03:05 AM

'மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியிடம், கர்நாடக முதல்வர் சிவகுமார் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை, கர்நாடக முதல்வர் சிவகுமார் டில்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், மத்திய நீர் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டி காட்டிய சிவகுமார், திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேகதாது திட்டத்தால் கர்நாடகா, தமிழகம் அடையும் பயன்கள் பற்றியும் எடுத்து கூறினார்.
கிருஷ்ணா நதிநீர் வழக்கில் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை, அரசிதழில் வெளியிட வேண்டும்; பத்ரா மேலணை திட்டத்திற்காக, 5,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்; மகதாயி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்; நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ், கர்நாடகாவுக்கு நியாயமான தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
நிதி கமிஷனிடம் இருந்து கிடைக்க வேண்டிய 2,860 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க வேண்டும்; பெங்களூரில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள 26,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்; பெங்களூரு சாட்டிலைட் நகர சுற்று சாலைக்கு மத்திய அமைச்சரவையின் அனுமதி; பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்திற்கு நிதி விடுவிப்பு; ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
பெங்களூரில் ஈரடுக்கு மேம்பாலத்துடன் கூடிய, மெட்ரோ பாதை அமைக்க அனுமதி; புதிய மெட்ரோ பாதைகளுக்கு அனுமதி; கல்யாண கர்நாடகா பகுதி வளர்ச்சிக்கு 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, பிரதமரிடம் சமர்பித்தார்.
இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து, கர்நாடகாவுக்கு பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது பற்றி ஆலோசனை நடத்தினார்.
