சில சமுதாயங்களுக்கு மட்டும் நிதி சர்ச்சையை ஏற்படுத்திய சித்தராமையா
சில சமுதாயங்களுக்கு மட்டும் நிதி சர்ச்சையை ஏற்படுத்திய சித்தராமையா
ADDED : ஜூன் 12, 2026 10:42 PM
பெங்களூரு: பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, ஒரே சமுதாயத்தின், 89 சங்கங்களுக்கு சித்தராமையா பகிர் ந்தளித்தது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
ஒரு அரசு, ஆட்சியில் இருந்து இறங்கும் போதோ அல்லது முதல்வர் மாறும் காலத்தில், அவசர, அவசரமாக முடிவுகள் எடுப்பது வழக்கம்.
சித்தராமையா முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பின், சிவகுமார் முதல்வராக பதவியேற்க, ஒரு நாள் பாக்கியிருக்கும் போது, சித்தராமையா நிதித்துறை மூலமாக, 155 சங்கங்களுக்கு, 71.85 கோடி ரூபாய் நிதி வழங்கினார். இவற்றில் குருபர் சமுதாயத்தின் சங்கங்களே அதிகம்.
கடந்த, 2026 - 27ம் ஆண்டு பட்ஜெட்டில், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் சமுதாய பவன்கள் கட்ட, 136 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது, பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் பட்டியலில் உள்ள, ஆயிரக்கணக்கான ஜாதிகளுக்கு பயன்பட வேண்டிய நிதியாகும்.
இந்த நிதியின், 57 சதவீதம் வெறும் மூன்று, நான்கு சமுதாயங்களுக்கு வழங்கியுள்ளார். சித்தராமையா நிதி வழங்கிய, 155 சங்கங்களில், 89 சங்கங்கள் குருபர் சமுதாயத்தை சேர்ந்ததாகும். ஒரே தாலுகாவில், 13 பவன்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாரபட்சமில்லாத தலைவர், சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர் என, கூறிக்கொள்ளும் சித்தராமையா, பல சமுதாயங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை, சில சமுதாயங்களுக்கு வழங்கி, பாரபட்சமாக நடந்து கொண்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அனைத்து சமுதாயங்களையும், சமமாக பார்க்க வேண்டும். நிதி வழங்கிய உத்தரவை, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர்.
