/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி
/
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி
ADDED : ஆக 02, 2025 01:55 AM
பெங்களூரு: ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க, பாதுகாப்பு கமிஷனர் அனுமதி கொடுத்துள்ளார்.
பெங்களூரின் ஆர்.வி.ரோடு முதல் ஓசூர் சாலையின் பொம்மசந்திரா வரை 18.82 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2016ல் மெட்ரோ பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. 2021ல் பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால், பணிகள் தாமதம் ஆகின. ஒரு வழியாக கடந்த ஆண்டு பாதை பணிகள் முடிந்தன.
ஆனாலும் சிக்னல் சரிபார்ப்பு, ரயில் நிலைய பராமரிப்புப் பணி, சீனாவில் இருந்து ரயில்கள் வருவதில் தாமதம் என, பல காரணங்களால் மெட்ரோ சேவை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில், மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கான எந்த முயற்சியும், மெட்ரோ அதிகாரிகள் எடுக்கவில்லை. ரயில் சேவையை உடனடியாக துவங்கக் கோரி, கடந்த மாதம் பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா தலைமையில் போராட்டம் நடந்தது.
மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின், ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள், புதிய மெட்ரோ ரயில் பாதையில் பாதுகாப்பு கமிஷனர் ஆனந்த் மதுகர் சவுத்ரி ஆய்வு செய்தார்.
இந்நிலையில் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மெட்ரோ ரயில் இயக்க, பாதுகாப்பு கமிஷனரிடம் இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த தகவலை மெட்ரோ ரயில் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி யஷ்வந்த் சவான் உறுதிப்படுத்தி உள்ளார்.
வரும் 15ம் தேதிக்குள் புதிய பாதையில், மெட்ரோ ரயில் சேவை துவங்கலாம் என்று கூறப்படுகிறது. திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி உறுதியான தகவல் இல்லை.