சக கைதிகளால் பவித்ரா கவுடா பாதிப்பு வேறு அறைக்கு இடம் மாற்றும்படி மனு
சக கைதிகளால் பவித்ரா கவுடா பாதிப்பு வேறு அறைக்கு இடம் மாற்றும்படி மனு
ADDED : செப் 05, 2026 11:15 PM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், சிறையில் உள்ள பவித்ரா கவுடா, சக கைதிகளால் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார். தன்னை வேறு அறைக்கு மாற்றும்படி மன்றாடுகிறார்.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா கைதாகி, பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைபட்டுள்ளனர். இவர்களுக்கு ஜாமின் கிடைக்கவில்லை.
இதற்கிடையே பவித்ரா கவுடாவுக்கு, புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது.சிறையில் சட்ட விரோதமாக மொபைல் போன் பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் சிறையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவிடம் மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டதால், அவரை சிறை அதிகாரிகள், வேறு சாதார-ண கைதிகள் உள்ள அறைக்கு மாற்றினர். அதே போல், பவித்ரா கவுடாவும் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.
சாதாரண மகளிர் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் தங்க முடியாமல், பவித்ரா கவுடா பரிதவிக்கிறார். நைஜீரிய பெண் கைதிகள், இரவு முழுதும் கத்தி, கூச்சல் போடுகின்றனர். இதனால் உறங்க முடியவில்லை. தன்னை வேறு அறைக்கு மாற்றும்படி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவரது சார்பில் வக்கீல், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மொத்தம், 20 கைதிகள் மட்டுமே, தங்க வசதியுள்ள அறையில், 30க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். சரியாக படுக்கவும் இடம் இல்லை. பவித்ரா கவுடா மன அழுத்தத்தில் தவிக்கிறார். பல கைதிகளுக்கு ஒரே கழிப்பறை உள்ளது. இதனால் அவருக்கு, அலர்ஜி, சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளது.
சரியான உறக்கம் இல்லாததால், தலைவலியால் அவதிப்படுகிறார். பவித்ரா கவுடாவின் அனுமதி இல்லாமல், அவரது உடைகள் உட்பட, மற்ற தனிப்பட்ட பொருட்களை, சக கைதிகள் பலவந்தமாக பயன்படுத்துகின்றனர்.
எனவே மனித நேய அடிப்படையில், அவரை வேறு அறைக்கு இடமாற்ற வேண்டும். தேவையான சிகிச்சை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
