விஜயபுரா - யஷ்வந்த்பூர் ரயிலில் கோளாறு 5 மணி நேரம் தாமதமாக வந்த தேர்வர்கள்
விஜயபுரா - யஷ்வந்த்பூர் ரயிலில் கோளாறு 5 மணி நேரம் தாமதமாக வந்த தேர்வர்கள்
ADDED : செப் 05, 2026 11:14 PM
பெங்களூரு: விஜயபுராவில் இருந்து யஷ்வந்த்பூருக்கு புறப்பட்ட ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நகர, மாவட்ட ஆயுத படை தேர்வுக்கு வந்த, 1,000 தேர்வர்கள், ரயில்வே துறை அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்தனர்.
விஜயபுராவில் இருந்து யஷ்வந்த்பூருக்கு நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில், பெங்களூரில் நகர ஆயுதப்படை மற்றும் மாவட்ட ஆயுதப்படை தேர்வு எழுத 1,000 பேர் பயணித்தனர்.
ஆனால், ரயில் புறப்பட்டு, 3 கிலோ மீட்டர் சென்றதும் நின்றது. நீண்ட நேரமாகியும் ரயில் இயங்காததால் தேர்வர்கள் கோபமடைந்தனர்.
இந்த மறுநாள் காலையான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சென்றால் தான், 9:30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு செல்ல முடியும். ஆனால் ரயில் புறப்படாததால், ரயிலில் இருந்து கீழே இறங்கிய தேர்வர்கள், ரயில் முன் நின்று, ரயில் ஓட்டுநரையும் ரயில்வே நிர்வாகத்தையும் திட்டினர்.
அத்துடன், மற்றொரு பாதையில் வந்த பசவா விரைவு ரயிலை நிறுத்தி, அந்த ரயில் மீது கற்களை வீசினர். தகவல் அறிந்த ரயில்வே போலீசார், இளைஞர்களை சமாதானப்படுத்தினர்.
பின், மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு, விஜயபுரா - யஷ்வந்த்பூர் விரைவு ரயிலின் பின்புறம் இணைத்து, பெங்களூருக்கு இயக்கினர்.
அப்போது தேர்வர்கள், நேற்று நடக்கும் தேர்வில் ஏற்படும் தாமதத்துக்கு ரயில்வே துறையே முழுபொறுப்பு என்று குற்றம்சாட்டினர். நேற்று ஐந்து மணி நேரம் தாமதமாக, காலை, 10:00 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடைந்தது.
இதனால், பலர் தேர்வு எழுதவில்லை.
