'ஆன்லைன்' விற்பனைக்கு எதிர்ப்பு மருந்தகங்கள் நாளை மூடல்
'ஆன்லைன்' விற்பனைக்கு எதிர்ப்பு மருந்தகங்கள் நாளை மூடல்
ADDED : மே 18, 2026 11:22 PM
பெங்களூரு: 'ஆன்லைன்' செயலி மூலம் மருந்துகள் விற்பனை செய்வதற்கு எதிராக, நாடு முழுதும் நாளை மருந்து கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு, கர்நாடக மாநில மருந்து விற்பனையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
கொரோனாவின் போது, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, 'ஆன்லைன்' செயலி மூலம் மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு, தற்காலிக அனுமதி அளித்திருந்தது.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பெரிய மருந்து நிறுவனங்கள், இன்னமும் செயலி மூலம் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றன.
இதை கண்டித்து, அகில இந்திய மருந்தக விற்பனையாளர்கள் சங்கம், நாளை 20ம் தேதி நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளது.
இதற்கு, கர்நாடக மாநில மருந்து விற்பனையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
கர்நாடக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரில் 6,500க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உட்பட மாநிலம் முழுதும் 25,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. பெருநிறுவனங்கள், செயலி அடிப்படையில் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகள், பத்து நிமிடத்தில் டெலிவரி மற்றும் பிற பொய் வாக்குறுதிகளை அளித்து, வாடிக்கையாளர்களை தங்கள் வசம் இழுத்துள்ளனர்.
இதனால், சிறு மற்றும் நடுத்தர மருந்து விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஆன்லைன் செயலி நிறுவனங்களின் செயலை கண்டித்து, நாளை அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கம் நடத்தும் நாடு தழுவிய கடையடைப்புக்கு, கர்நாடக மாநில மருந்தக விற்பனையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.
மருந்து என்பது விற்பனை பொருள் மட்டுமல்ல, அது உயிர்காக்கும் மருந்தும் கூட. எனவே, நோயாளிகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மருத்துவமனைகள் அருகில் உள்ள ஒரு சில மருந்து கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பெரும்பான்மை கடைகள் நாளை மூடப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
