/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி... ஒட்டு கேட்பு? எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டால் பரபரப்பு
/
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி... ஒட்டு கேட்பு? எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி... ஒட்டு கேட்பு? எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி... ஒட்டு கேட்பு? எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றச்சாட்டால் பரபரப்பு
ADDED : மார் 25, 2025 02:05 AM

கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா, தன்னை ஹனிடிராப் வலையில் சிக்க வைக்க முயற்சி நடப்பதாக, சட்டசபையிலேயே குற்றம்சாட்டினார். இந்த விஷயத்தில் சொந்த கட்சியினர் கைவரிசை இருக்கலாம் என, மறைமுகமாக கூறினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, பா.ஜ.,வினர் சட்டசபையை முடக்கினர்.
'ஹனி டிராப்' விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடிக்கிறது. இதற்கிடையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரசுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் கத்தி தீட்டுகின்றனர். பாம்பு, ஏணி ஆட்டம் ஜோராக நடக்கிறது. கட்சியில் தங்கள் கை ஓங்க வேண்டும் என்ற நோக்கில், பல தலைவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மனம் போனபடி நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சொந்த கட்சியினருக்கு எதிராக ஹனிடிராப், தொலைபேசி ஒட்டு கேட்பு, நிதி வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பது என, பல வகைகளில் தொல்லை கொடுப்பது, மேலிடத்தின் கவனத்துக்கும் சென்றுள்ளது.
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையாவை நலம் விசாரிக்க நேற்று முன்தினம் சென்றிருந்தார்.அப்போது இரு தலைவர்களும், ஹனிடிராப், தொலைபேசி ஒட்டு கேட்பு குறித்து பேசியுள்ளனர்.
இந்த விஷயத்தில் தான் எதையும் செய்ய முடியாமல் இயலாமையில் இருப்பதாக முதல்வர் சித்தராமையா, கார்கேவிடம் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக், நேற்று அளித்த பேட்டி:
தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவது, நுாறுக்கு நுாறு சதவீதம் உண்மைதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகிறது. எனது மற்றும் மத்திய அமைச்சர் குமாரசாமியின் தொலைபேசியை ஒட்டு கேட்கின்றனர்.
கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா, காங்., - எம்.எல்.சி., ராஜேந்திராவை ஹனிடிராப்பில் சிக்க வைக்க, அவர்களின் தொலைபேசியை ஒட்டு கேட்டுள்ளனர். இது குறித்து நானும், குமாரசாமியும் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தோம். இவர்கள் மட்டுமின்றி பல எம்.எல்.ஏ.,க்களின் தொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்படுகிறது.
காங்கிரசின் கோஷ்டி மோதல், உட்கட்சிபூசலால் மாநில அரசு சாகும் நிலைக்கு வந்துள்ளது. முதல்வரின் நாற்காலியை வைத்து, 'மியூசிக்கல் சேர்' விளையாடுகின்றனர். சக்கர நாற்காலியில் முதல்வர் அமர்ந்திருக்கிறார்.கோஷ்டி பூசலால் காங்கிரஸ் சேதமடைந்துள்ளது. வரும் நவம்பரில் காங்கிரசின் கிரஹநிலை மாறும். காங்கிரசின் உட்கட்சி பூசல் வீதிக்கு வந்துள்ளது. தீப்பிழம்பு போன்று வெடித்து சிதறியுள்ளது.
சட்டசபை கூட்டத்தில் சபாநாயகர் பீடத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி எங்கள் கட்சியின் 18 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை திரும்ப பெறும்படி, சபாநாயகரிடம் கோரியுள்ளோம். ரம்ஜான் பண்டிகைக்கு பின், இது குறித்து பேசுவதாக கூறியுள்ளார். காங்கிரசாரின் சதியால், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார்.