ADDED : மே 18, 2026 11:17 PM

- நமது நிருபர் -
தட்சிண கன்னடா மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவிலில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என, கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இது ஆதிசக்தி பார்வதிக்கு, அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இங்கு குடிகொண்டுள்ள அம்பாள், தீயசக்திகளை விரட்டி, பக்தர்களை காப்பாற்றுவார்.
கேட்ட வரங்களை அள்ளித்தருவார் என்பது ஐதீகம். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
அறிவுறுத்தல் அரசியல்வாதிகளும் அதிகம் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால், பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிலர் கோவில் விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதால், கோவிலின் புனிதத்தன்மைக்கு களங்கம் ஏற்படுகிறது. இதை தீவிரமாக கருதிய கோவில் நிர்வாகம், கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என, பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கோவிலுக்குள் மொபைல் போன் பயன்படுத்தவோ, போட்டோ ஷூட் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தோல் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருட்கள், குடை, கம்புகளை உள்ளே கொண்டு வர கூடாது.
வளர்ப்பு பிராணிகளை கோவிலுக்குள் அழைத்து வர அனுமதி இல்லை.
கோவிலுக்குள்ளும், வெளியிலும் இளநீர் குடிப்பது, புகை பிடிப்பது, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பிரதாய உடை கோவிலின் ரத வீதி, நந்தினி ஆறு உட்பட, கோவில் எல்லைக்கு உட்பட்ட, எந்த இடத்திலும், இத்தகைய பொருட்கள் பயன்படுத்தவோ, உமிழவோ கூடாது. பக்தர்கள், இந்திய சம்பிரதாய உடைகளை மட்டுமே அணிந்து, கோவிலுக்கு வர வேண்டும்.
நாகரீக உடைகளை அணிந்து வரக்கூடாது. இறைச்சி சாப்பிட்டவர்கள், மதுபானம் அருந்தியவர்களுக்கு, அனுமதி இல்லை. கோவிலுக்கு வருவதற்கு முன், குளிப்பது கட்டாயம்.
இறந்தவரின் உடலை பார்த்திருந்தால், அன்று குளிக்காமல் கோவிலில் நுழையக்கூடாது.
பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள பக்தர்களுக்கும், கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சனாதன தர்மத்தின் நடைமுறைப்படி, கர்ப்பிணியருக்கு ஏழு மாதம் நிரம்பிய பின், கோவிலுக்கு வர கூடாது.
கோவிலுக்குள் அமைதியான சூழ்நிலை இருக்க வேண்டும். இங்கு வரும் பக்தர்கள், சத்தமாக பேசவோ, தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவோ கூடாது. துர்கை அம்மனுக்கு, வாழை நாரால் தொடுக்கப்பட்ட மல்லிகை பூக்களை மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும். ஏகாதசி நாட்களில் சிறப்பு பூஜைகள் இருக்காது.
பிரசாதம் கோவிலுக்குள் பிரசாதமாக வினியோகிக்கும் உணவை தவிர, வேறு எந்த உணவை சாப்பிடவும் அனுமதி இல்லை.
பக்தர்கள் தங்களின் நகைகள், விலை உயர்ந்த பொருட்களை, தாங்களே உஷாராக பார்த்து கொள்ள வேண்டும்.
இவைகள் காணாமல் போனால் அல்லது திருடு போனால், கோவில் நிர்வாகம் பொறுப்பல்ல.
பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் நாட்களில், அன்ன பிரசாதம், தங்கும் அறைகள் கிடைப்பதில், தொந்தரவு ஏற்படலாம். இதை சகித்து கொண்டு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோவில் நிர்வாகத்தின் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி, கட்டீல் துர்கா பரமேஸ்வரியை தரிசிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
