/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கூரை இல்லாமல் திறந்த வெளியில் ஆட்சி செய்யும் பிசிலு மாரம்மா
/
கூரை இல்லாமல் திறந்த வெளியில் ஆட்சி செய்யும் பிசிலு மாரம்மா
கூரை இல்லாமல் திறந்த வெளியில் ஆட்சி செய்யும் பிசிலு மாரம்மா
கூரை இல்லாமல் திறந்த வெளியில் ஆட்சி செய்யும் பிசிலு மாரம்மா
ADDED : செப் 23, 2025 04:55 AM

கோவில் என்றால் அழகான கட்டடம் மூலஸ்தானம், மேற்கூரை இருக்கும். ஆனால் நஞ்சன்கூடின் ஒரு கிராமத்தில் உள்ள கோவில், திறந்த வெளியில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள பிசிலு மாரம்மா, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
கட்டளை மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின் ஹெடதலே கிராமத்தில் பிசிலு மாரம்மா கோவில் உள்ளது. இந்த கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. திறந்த வெளியில் அமைந்துள்ளது. சுற்றிலும் நான்கு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. மேற்கூரை இல்லை. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா, மழையில் நனைகிறார். வெயிலில் காய்கிறார்.
பல ஆண்டுக்கு முன், கோவில் கட்ட பக்தர்கள் திட்டமிட்டனர். அப்போது கிராமத்தினரின் கனவில் வந்த மாரம்மா, 'எனக்கு கோவில் கட்ட வேண்டாம். நான் வெயிலில் இருக்க விரும்புகிறேன். திறந்த வெளியில் இருப்பேன்' என கட்டளையிட்டாராம். எனவே கோவில் கட்டும் திட்டத்தை கிராமத்தினர் நிறுத்தி விட்டனர்.
அன்று முதல் திறந்த வெளியில், பக்தர்களை காப்பாற்றி வருகிறார். வெயிலில் அமர்ந்துள்ளதால், பிசிலு மாரம்மா என, பெயர் ஏற்பட்டது. பிசிலு என்றால் கன்னட மொழியில் வெயில் என அர்த்தமாகும்.
திருமணம் தடைபட்டவர்கள், வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவித்தவர்கள், இங்கு வந்து மாரம்மாவை மனமுருக வேண்டினால், கஷ்டங்கள் மறையும். திருமணம் கை கூடும் என்பது ஐதீகம். குறிப்பாக குழந்தைகளை காப்பாற்றுவார். குழந்தை பெற்ற பெண்களுக்கு, தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். நினைத்தபடியே பால் சுரக்கும்.
திருமணமாகி பல ஆண்டாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், டாக்டர்களை பார்த்தும் பலன் கிடைக்காமல் மனம் நொந்த தம்பதி, மாரம்மா கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் உடனடியாக குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன் இதே காரணத்தால், வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிரார்த்தனை செய்கின்றனர். குழந்தை பிறந்தவுடன், கோவிலுக்கு வந்து அம்பாளின் காலடியில் குழந்தையை வைத்து வணங்குகின்றனர். சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
நோய்களை குணமாக்குவதிலும், பிசிலு மாரம்மா குறை வைக்க மாட்டார். நீண்டகால நோயால் அவதிப்படும் நோயாளிகள், இங்கு வந்து அம்பாளை தரிசனம் செய்து, நோயை போக்கும்படி வேண்டுகின்றனர். சில நாட்களில் நோய் குணமாகி, ஆரோக்கியம் விருத்தியாகும்.
- நமது நிருபர் -