/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கித்வாய் மருத்துவமனையில் கூடுதல் பிளாக் கட்ட திட்டம்
/
கித்வாய் மருத்துவமனையில் கூடுதல் பிளாக் கட்ட திட்டம்
கித்வாய் மருத்துவமனையில் கூடுதல் பிளாக் கட்ட திட்டம்
கித்வாய் மருத்துவமனையில் கூடுதல் பிளாக் கட்ட திட்டம்
ADDED : நவ 17, 2025 02:28 AM
பெங்களூரு: புற்று நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில், கூடுதல் படுக்கை வசதிகள் செய்ய, மருத்துவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன், நோயை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
ஹொம்பேகவுடா நகரில் உள்ள, கித்வாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
மருத்துவமனையில் சேர்ப்பதும், சிகிச்சை அளிப்பது தாமதமானால் நோய் தீவிரமடையும் அபாயம் உள்ளது.
ஆனால் நோயாளிகளை உடனடியாக சேர்த்து கொண்டு, சிகிச்சை அளிக்க படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில், புதிதாக 450 படுக்கைகள் கொண்ட பிளாக் கட்டப்படும். அதன்பின் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
புற்றுநோய் மூன்றாவது, நான்காவது கட்டத்தில் இருக்கும் போது தான் 50 சதவீதம் நோயாளிகள், சிகிச்சைக்கு வருகின்றனர். 14.3 சதவீதம் பேர் மட்டுமே, முதலாவது, இரண்டாவது கட்டத்தில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில், கட்டணம் மிகவும் அதிகம் என்பதால், கித்வாய்க்கு வருகின்றனர்.
தாமதமாக வருவதால், சிகிச்சைக்கான நாட்களும் அதிகரிக்கிறது. எனவே புதிய பிளாக் கட்ட, மருத்துவ கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
நான்கு மாடி கட்டடம் கட்டப்படும். இதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி பயன்படுத்தப்படும்.
தற்போது புற்றுநோய் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பலரும் பரிசோதனை செய்து கொள்கின்றனர்.
இதனால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நோய் கட்டுக்குள் வந்ததாக, இறுதி அறிக்கை வரும் வரை, நோயாளிகளை மருத்துவமனை வார்டுகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

