ADDED : மே 16, 2026 03:39 AM
தட்சிண கன்னடா: மோ சமான வானிலை காரணமாக, பெங்களூரில் இருந்து மங்களூரு வந்த விமானம் அரை மணி நேரம் வானத்தில் வட்டமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் 'ஐ எக்ஸ் 2924' விமானம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது.
மங்களூரு அருகே விமானம் வரும் போது, திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் விமானி, வானத்தில் அரை மணி நேரமாக, 12 முறை வட்டமிட்டபடி இருந்தார்.
விமானம் மிகவும் தாழ்வாக பறப்பதை மூடபித்ரி, பெல்தங்கடி, பன்ட்வால், விட்லா பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் வானிலை மாற்றம் குறைந்ததால், பாதுகாப்பாக விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
இது குறித்து விமான நிர்வாகத்திடம் கேட்டபோது, 'கனமழை, அடர்ந்த மேகமூட்டம் காரணமாக, பெங்களூரில் இருந்து வந்த விமானம் உட்பட இரு விமானங்கள் தரையிறங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. ஆனாலும், வானிலை மாறியதால், விமானங்கள் பத்திரமாக தரையிறங்கியது' என்றார்.
