குக்கே சுப்ரமண்யா கோவிலில் பிளாஸ்டிக் தடை: சோதனை சாவடி அமைக்க அமைச்சர் உத்தரவு
குக்கே சுப்ரமண்யா கோவிலில் பிளாஸ்டிக் தடை: சோதனை சாவடி அமைக்க அமைச்சர் உத்தரவு
ADDED : மே 27, 2026 06:38 AM

தட்சிண கன்னடா: ''குக்கே சுப்ரமண்யா கோவிலில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறினார்.
தட்சிண கன்னடா மாவட்டம், குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலுக்கு நேற்று வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே வந்தார்.
சுவாமி தரிசனம் செய்த பின், அவர் அளித்த பேட்டி:
குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலுக்கு வரும் பாதையில், சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், தட்டுகள் கிடந்ததை பார்த்தேன். கோவிலுக்கு வரும் நான்கு சாலைகளிலும் வாகன சோதனை சாவடி அமைத்து, பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்க வேண்டும். கோவிலிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். எந்த வகையிலும் வன விலங்குகளால் பக்தர்கள் பாதிப்பு ஏற்படக்கூடாது.
சிறுத்தைகள் அதிகமாக நடமாடும் இடங்களில் கூடுதலாக கூண்டுகள் அமைக்கவும், ஊருக்குள் யானைகள் நுழையாத வகையில், வனப்பகுதி சுற்றிலும் சோலார் மின் வேலி அமைக்கவும் உத்தரவிட்டு உள்ளேன்.
மாநிலத்தில் உள்ள வன நிலங்கள் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 2022ல் பா.ஜ., ஆட்சியின் போது, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், 8.22 லட்சம் ஏக்கர் வனப்பகுதி என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த வனப்பகுதியில் சில அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், பட்டா நிலங்கள் உள்ளன. எனவே, வருவாய் துறையுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
வருவாய் துறை சர்வேயர்கள் சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுப்பியில் சர்வேயர்கள் பற்றாக்குறை உள்ளதாக, கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
வன நிலங்களை ஆய்வு செய்வதற்காக ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். இது தொடர்பாக வருவாய் துறை அமைச்சரிடம் விவாதிப்பேன்.
மனித உயிர் என்பது விலை மதிப்பற்றது. மனிதர் - விலங்கு மோதலில், ஒரு உயிர் கூட போகக்கூடாது. வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. இதை கண்காணிக்க கட்டுப்பாடு மையமும் திறக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
