/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிரதமர் மோடி.. புகழாரம்!: டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் துவக்க விழாவில் உற்சாகம்
/
பெங்களூரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிரதமர் மோடி.. புகழாரம்!: டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் துவக்க விழாவில் உற்சாகம்
பெங்களூரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிரதமர் மோடி.. புகழாரம்!: டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் துவக்க விழாவில் உற்சாகம்
பெங்களூரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிரதமர் மோடி.. புகழாரம்!: டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் துவக்க விழாவில் உற்சாகம்
ADDED : ஆக 11, 2025 04:43 AM

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை விமானத்தில் வந்தார்.
பெங்களூரு ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர், பல்லாரி சாலையில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கமாண்டண்ட் மையத்தில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கினார். பின், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு காரில் வந்தார்.
மாணவர்கள் உற்சாகம் ரயில் நிலையத்தின் நடைமேடை 6ல் நடந்த நிகழ்ச்சியில், பெங்களூரு - பெலகாவி; அமிர்தசரஸ் - ஸ்ரீமாதா வைஷ்ணோதேவி கத்ரி; அஜ்னி - புனே இடையிலான புதிய வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, முதல்வர் சித்தராமையா, அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ.,- எம்.பி., மோகன், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, வந்தே பாரத் ரயிலுக்குள் சென்ற பிரதமர் மோடி, அந்த ரயிலில் பயணிக்க இருந்த மாணவ - மாணவியருடன் உரையாடினார்.
வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கிய பின், காரில் புறப்பட்ட பிரதமர், ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையிலான டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க, ராகிகுட்டா மெட்ரோ ரயில் நிலையம் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பின், கியூ.ஆர்., கோடு மூலம் டிக்கெட் எடுத்து, மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி, ரயிலில் பயணித்த மாணவ - மாணவியர், பொதுமக்களுடன் உரையாடினார். எலக்ட்ரானிக் சிட்டி மெட்ரோ நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து ஐ.ஐ.டி., ஆடிட்டோரியம் சென்றார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில், 15,610 கோடி ரூபாய் செலவில், 44.65 கி.மீ., துாரத்தில் அமைய உள்ள, பெங்களூரு நகரின் மூன்றாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அன்னம்மா தேவி பின், பிரதமர் மோடி பேசியதாவது:
இங்கு காலடி எடுத்து வைத்தவுடன், நான் கர்நாடகாவை சேர்ந்தவன் என்பது போன்று உணருகிறேன். இங்குள்ள கலாசாரம், கன்னட மொழி, மக்கள் என் மீது காட்டும் அன்பு என் இதயத்தை தொடுகின்றன. பெங்களூரின் தலைமை தெய்வமான அன்னம்மா தேவியின் பாதங்களை வணங்குகிறேன்.
கெம்பேகவுடா பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். இன்று, பெங்களூரு புதிய இந்தியாவின் எழுச்சியின் அடையாளமாக மாறி வரும் நகராக வளர்ந்து வருகிறது.
உலகளாவிய தகவல் தொழில்நுட்ப வரைபடத்தில், பெங்களூரு தனக்கென ஒரு இடம் பிடித்து உள்ளது. பெங்களூரின் வெற்றி கதை இங்குள்ள மக்களின் கடின உழைப்பு, திறமைக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.பெங்களூரு போன்ற பெரும் நகரங்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், பெங்களூருக்கு இது எனது முதல் வருகை.
எல்லை தாண்டி பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழித்த பெருமை ஆப்பரேஷன் சிந்துாரை சேரும். பயங்கரவாதிகளை பாதுகாத்து வந்த பாகிஸ்தானை, சில மணி நேரங்களுக்குள் இந்தியா முன்பு மண்டியிட வைத்த பெருமையும் ஆப்பரேஷன் சிந்துாரை சாரும்.
புதிய இந்தியாவின் இந்த புதிய முகத்தை உலகம் முழுதும் கண்டு வியப்பு அடைந்தது. தொழில்நுட்ப சக்தி, மேக் இன் இந்தியாவின் அபார வளர்ச்சி, ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிக்கு காரணம். ஆப்பரேஷன் சிந்துார் சாதனையில் பெங்களூரு மற்றும் கர்நாடக இளைஞர்களின் பங்களிப்பும் உள்ளது.
ஆர்.வி.,ரோடு - பொம்மசந்திரா இடையிலான மெட்ரோ ரயில் பாதை துவங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பசவனகுடிக்கும், எலக்ட்ரானிக் சிட்டிக்கும் இடையிலான பயண நேரம் குறைவதுடன், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை முறையை எளிமையாக்கவும் உதவும்.
இன்போசிஸ், பயோகான், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தங்கள் பங்களிப்பை
கொடுத்து உள்ளன.
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து உள்ளது. எங்கள் ஆட்சியில் மெட்ரோ ரயில் பெரிய நெட்ஒர்க்காக மாறி உள்ளது. 40,000 கி.மீ., துார ரயில் பாதைகளை மின்மயமாக்கி உள்ளோம்.
சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில அரசு பங்கு முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு, மத்திய அரசு நிதி, தொழில்நுட்ப உதவிகளை செய்கிறது. மெட்ரோ திட்டத்தின் 1, 2, 2ஏ, 2பி, 3வது கட்டங்களுக்கு மாநில அரசு இதுவரை 59,139 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. மொத்த பங்களிப்பு 87.37 சதவீதம். மத்திய அரசு, 7,468 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. அவர்களின் பங்களிப்பு 12.63 சதவீதம்.
மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் 50:50க்கு பங்களிப்பு என்று ஒப்பு கொள்ளப்பட்டது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை, மாநில அரசும், மெட்ரோ நிறுவனமும் இணைந்து வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். இதன்மூலம் எங்களுக்கு 87.37 சதவீதம் சுமை உள்ளது.
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோ பாதை திறக்கப்பட்ட பின், தென் மாநிலங்களில் நீளமான மெட்ரோ நெட்ஒர்க் என்ற பெருமை, பெங்களூருக்கு கிடைத்து உள்ளது.
நகரில் மொத்தம் 96.10 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. பெங்களூரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அதிகம் நிதி ஒதுக்க வேண்டும்.
புதிய மெட்ரோ பாதை போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், தொழில்நுட்ப மையங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். பெங்களூரு மெட்ரோ பணிகளில் நாம் இன்னும் நீண்ட துாரத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
வரும் 2030ம் ஆண்டிற்குள் 220 கி.மீ., நீள மெட்ரோ பாதையை முடித்து, தினமும் 30 லட்சம் மக்களை பயணிக்க வைப்பது எங்கள் நோக்கம். நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு வழங்கும் பெங்களூரு வளர்ச்சிக்கு, மாநில அரசுடன், மத்திய அரசு கைகோர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.