சிறைக்குள் இருந்தபடி வீடியோ காலில் சிறுமியை மிரட்டிய 'போக்சோ' கைதி
சிறைக்குள் இருந்தபடி வீடியோ காலில் சிறுமியை மிரட்டிய 'போக்சோ' கைதி
ADDED : மார் 31, 2026 04:26 AM

தார்வாட்: போக்சோ வழக்கில் கைதியாக சிறையில் இருப்பவர், பாதிக்கப்பட்ட பெண்ணை, 'வீடியோ காலில்' தொடர்பு கொண்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டிய அதிர்ச்சிகரமான சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தார்வாட் மத்திய சிறையில், 'போக்சோ' கைதியாக இருப்பவர் பர்வேஸ், 21. முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர், ஹிந்து மத சிறுமியை காதல் என்ற பெயரில், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில், பர்வேஸ் கடந்த, 13ம் தேதி சிறையில் இருந்தபடியே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொபைல் போனில் 'வீடியோ கால்' செய்தார். 'கோர்ட்டில் எனக்கு ஆதரவாக பேச வேண்டும்; இல்லையெனில், உன்னை கொலை செய்வேன். என் மொபைல் போன் அழைப்பை எடுக்கவில்லை என்றால், கொடூரமாக கொலை செய்வேன். உன்னுடைய அந்தரங்க வீடியாவை இணையத்தில் வெளியிடுவேன்' என்று மிரட்டினார்.
பர்வேஸ் பேசியது அனைத்தையும், சிறுமி தன் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதை தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து, அவரது பெற்றோர், சிறைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பெற்றோர், ஸ்ரீ ராமசேனா அமைப்பினரை தொடர்பு கொண்டு நடந்ததை எடுத்து உரைத்தனர்.
ஸ்ரீராமசேனா அமைப்பினர் சிறையின் முன் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். 'லவ் ஜிஹாத்' எனக்கூறி முழக்கமிட்டனர். இதையடுத்து, போக்சோ குற்றவாளி பர்வேஸ் விஜயபுரா சிறைக்கு மாற்றப்பட்டார். பர்வேஸ் சிறுமியுடன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானது. சிறையில் இருக்கும் குற்றவாளி மொபைல் போனை பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மொபைல் போன் எப்படி வந்தது?
ஸ்ரீராமசேனா அமைப்பினர் கூறியதாவது:
மத்திய சிறையில் இருக்கும் குற்றவாளியின் கையில் மொபைல் போன் எப்படி வந்தது. சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தும் குற்றவாளி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன. சிறையில் அதிகாரிகள் ஆதரவு இல்லாமல், குற்றவாளிகள் மொபைல் போன் உபயோகிப்பது சாத்தியமற்றது. எனவே, பர்வேஸுக்கு உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரம் குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
