போராடுவோரிடம் பேச்சு நடத்தணும் அரசிடம் போலீஸ் துறை கோரிக்கை
போராடுவோரிடம் பேச்சு நடத்தணும் அரசிடம் போலீஸ் துறை கோரிக்கை
UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 07:24 PM
பெங்களூரு: பெங்களூரில் அமைப்புகள், சங்கங்கள் போராட்டம் நடத்தும் போது, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிய அதிகாரிகளை நியமிக்கும்படி, கர்நாடக அரசிடம் போலீஸ் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, மாநில அரசிடம் போலீஸ் துறை விடுத்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் அமைப்புகள், அரசியல்கட்சிகள் உட்பட, பலரும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்த பெங்களூரின் சுதந்திர பூங்காவை தேர்வு செய்கின்றனர். விதான் சவுதா அருகிலேயே, சுதந்திர பூங்கா உள்ளது.
ஆட்சி நடத்துவோர் தங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, தீர்த்து வைக்க வேண்டும் என்பதால், சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், போராட்டக்காரர்களின் பிரச்னைகளை கேட்க வருவது இல்லை.
சில நேரங்களில் அமைச்சர்கள் வந்தாலும், அதிகாரிகள் வருவதில்லை. அதிகாரிகள் தலையிட்டால், பல பிரச்னகள் ஆரம்பத்திலேயே சரியாகும். போராட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், போராட்டக்காரர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யவும், போலீசார் உதவுகின்றனர்.
கழிப்பறை வசதி இல்லாமல், பெண்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் பயன் இல்லை. அனைத்து பொறுப்புகளையும், போலீசார் மீது சுமத்தி விட்டு, அதிகாரிகள் நழுவுகின்றனர். எனவே, போராட்டங்களில் ஈடுபடுவோரிடம் பேச்சு நடத்த, அந்தந்த துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
