பள்ளிக்கு செல்லாமல் பிடிவாதம் சிறுவன் மனதை மாற்றிய போலீசார்
பள்ளிக்கு செல்லாமல் பிடிவாதம் சிறுவன் மனதை மாற்றிய போலீசார்
ADDED : ஆக 25, 2026 01:15 AM
மைசூரு: மைசூரு மாவட்டம், ஹெச்.டி.கோட்டே தாலுகாவின் யரஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சுபாஷ். இவரது மகன் ராகேஷ், 13. இவர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இவர், கடந்த ஒரு வாரமாக பள்ளி செல்லாமல் அடம் பிடித்தார்.
பெற்றோர் அறிவுரை கூறி, பள்ளிக்கு செல்லும்படி மன்றாடியும், ராகேஷ் மதிக்காமல் வீட்டிலேயே இருந்தார். தன்னை பள்ளிக்கு செல்லும்படி கட்டாயப்படுத்தும் பெற்றோருடன், சண்டை போட துவங்கினார். ஒரு வாரமாக வீட்டில் இருக்கும் மகனை, நேற்று காலை பள்ளிக்கு அழைத்து செல்ல பெற்றோர் முயற்சித்தனர்; ஆனால் முடியவில்லை.
ஒரு கட்டத்தில் மகனின் பிடிவாதத்தால், வெறுப்படைந்த தந்தை சுபாஷ், வேறு வழியின்றி அவசர உதவி 112ல், போலீசாரை தொடர்பு கொண்டு, பிரச்னையை விவரித்தார். அப்போது பணியில் இருந்த தலைமை ஏட்டு கோவிந்தராஜ், ஏட்டு ரமேஷ் ஆகியோர் ஹொய்சாளா வாகனத்தில், யரஹள்ளி கிராமத்தின் ராகேஷின் வீட்டுக்கு வந்தனர்.
அவரை மிரட்டாமல், கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, பள்ளிக்கு செல்லும்படி அன்போடு அறிவுரை கூறினர். அதன்பின் மனம் மாறிய ராகேஷ், பள்ளிக்கு செல்ல சம்மதித்தார். அவரை போலீசார் தங்களின் வாகனத்தில் அமர்த்தி, பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
சிறுவனை மிரட்டாமல், பொறுமையுடன் பேசி பள்ளிக்கு செல்ல வைத்த போலீசாரின் செயலை, கிராமத்தினர் பாராட்டினர்.
