ADDED : ஆக 25, 2026 01:15 AM
மடிவாளா: பெங்களூரில் நடுரோட்டில் மருந்து கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரவுடி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரின் பொம்மனஹள்ளி மங்கம்மனபாளையாவில் வசித்தவர் சுஹேல், 35. மருந்து கடை நடத்தினார். கடந்த 22ம் தேதி இரவு மடிவாளா சுரங்க பாதையில், ஆறு பேர் கும்பலால் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி 13ம் தேதி பந்தேபாளையா பகுதியில் ஷபீர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக சுஹேல் கொல்லப்பட்டது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த ஷபீரின் நண்பரான ரவுடி ஆதில், அவரது கூட்டாளிகள் யாசின், அப்பாஸ், அபிவுல்லா, ஷான், சையது பர்ஹான் ஆகியோரை, மடிவாளா போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஆனேக்கல் பகுதியில் கைது செய்தனர். இவர்கள் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
கொலைக்கு பின், கன்டெய்னர் லாரியில் ஏறி, மும்பைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்தது தெரிந்தது. ஷபீர் கொலையில் சுஹேலுக்கு நேரடியாக தொடர்பு இல்லை. ஆனால், அவரது சகோதரர்கள் இருவருக்கு தொடர்பு இருந்தது. அவர்களை கொலை செய்ய உள்ளதாக ஆதில் கூறியுள்ளார்.
இதுபற்றி அறிந்த சுஹேல், 'என் சகோதரர்கள் மீது கை வைத்தால் ஆதிலை கொன்று விடுவேன்' என்று கூறி வந்துள்ளார். ஆத்திரம் அடைந்த ஆதில், கூட்டாளிகளுடன் சேர்ந்து சுஹேலை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.
