ADDED : ஏப் 03, 2026 03:57 AM

பெங்களூரு: கர்நாடகாவில் போலீஸ் துறைக்கான ஆள்சேர்ப்பில் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர உள்ளதாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள கர்நாடக ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில், போலீஸ் கொடியேற்ற நாள், சிறந்த போலீசாருக்கு முதல்வர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பல்லாரி எஸ்.பி.,யான ஐ.பி.எஸ்., அதிகாரி சுமன் பன்னேகர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு பதக்கம் வழங்கி முதல்வர் சித்தராமையா கவுரவித்தார்.
தேசிய சராசரி பின், அவர் பேசியதாவது:
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கி தருவதில், கர்நாடக போலீஸ் துறை முன்னணியில் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். அதே நேரத்தில், ஆன்லைன் மோசடி, போதைப் பொருள் விற்பனை நம் மாநிலத்தில் அதிகரித்து உள்ளது. இது, தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த வேண்டும். இணைய வழி குற்றங்களை தடுக்க, தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதை கருத்தில் கொண்டு போலீஸ் துறையும் செயல்பட வேண்டும். மாநிலம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை இடையே நேரடி தொடர்பு உள்ளது.
சட்டம் - ஒழுங்கு சீராக இருந்தால் முதலீடுகள் அதிகரித்து, உற்பத்தி, தொழில் வளம் பெருகும். பொருளாதாரத்திற்கு பங்களிப்பு அளிக்கும். கர்நாடகாவை போதைப்பொருள் பயன்பாடு இல்லாத மாநிலமாக மாற்றுவதே அரசின் குறிக்கோள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இணையவழி உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேசியதாவது:
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க போலீசாராகிய நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள். இதற்காக என் பாராட்டுகள். ராய்ச்சூரின் கவிதாலா போலீஸ் நிலையம், நம் நாட்டின், 3வது சிறந்த போலீஸ் நிலையம் என்று, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
வரும் நாட்களில் அனைத்து போலீஸ் நிலையங்களும், கவிதாலா போலீஸ் நிலையம் போன்று பெயர் எடுக்க வேண்டும்.
மாநிலத்தை போதைப்பொருள் பயன்பாடு இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். டிஜிட்டல் மோசடியை தடுக்க, சைபர் கமான்டண்ட் மையத்தை நிறுவி, அதற்கு டி.ஜி.பி.,யை பதவியில் அமர்த்தி உள்ளோம். நம் மாநிலத்தை நக்சல்கள் இல்லாத மாநிலமாக மாற்றி இருக்கிறோம்.
வரும் நாட்களில், போலீஸ் துறையில் நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். ஆன்லைன் மோசடியை தடுக்க, போலீசாருக்கு அனைத்து மட்டத்திலும் பயிற்சி அளிக்கப்படும். ஆட்கள் சேர்ப்பு இணையவழியில் நடத்தப்படும். போலீஸ் ஆள்சேர்ப்புக்கு வாரியம் அமைக்கப்படும் என்று, பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்து உள்ளார். இது நல்ல முடிவு. இதன்மூலம் நேர்மையான முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
