போலீசாரும் சாலை விதிகளை மதிக்கணும் போக்குவரத்து டி.ஜி.பி., உத்தரவு
போலீசாரும் சாலை விதிகளை மதிக்கணும் போக்குவரத்து டி.ஜி.பி., உத்தரவு
ADDED : ஆக 02, 2026 12:59 AM
பெங்களூரு: சாலை விதிகளை மீறும் பொதுமக்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் போலீசாரே விதிகளை மீறும் வீடியோக்கள் பரவுகின்றன. எனவே போலீசாரும் போக்குவரத்து விதிகளை பின்பற்றியே ஆக வேண்டும் என, போக்குவரத்து பிரிவு, டி.ஜி.பி., பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
வாகன பயணியர் பலரும், சாலை விதிகளை மீறுகின்றனர். ஹெல்மெட் போடாமல் செல்வது, சிக்னல் ஜம்ப், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது, அதி வேகம், நோ பார்க்கிங் பகுதிகளில், வாகனத்தை நிறுத்துவது என, பல விதங்களில் விதிகளை மீறுகின்றனர்.
இவர்களுக்கு போக்குவரத்து போலீசார், அபராதம் விதிக்கின்றனர். வழக்கு பதிவு செய்வதுடன், பல நேரங்களில் வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், போலீஸ் துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள், ஏட்டுகளே சாலை விதிகளை மீறுகின்றனர்.
ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் செல்வது, வாகனம் ஓட்டும் போது, மொபைலில் பேசுவது, நோ பார்க்கிங் இடத்தில், வாகனத்தை நிறுத்துவது, ஒரு வழி பாதையில் செல்வது, ஒரே பைக்கில் மூவர் செல்வது என, பல விதங்களில் சாலை விதிகளை மீறுகின்றனர்.
இதை காணும் பொது மக்கள், தங்களின் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.
பொது மக்களுக்கு மட்டுமே சட்டமா. இது போலீசாருக்கு பொருந்தாதா, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசாரே, போக்குவரத்து விதிகளை அலட்சியப்படுத்தலாமா என, கேள்விகளால் துளைக்கின்றனர்.
இதை தீவிரமாக கருதிய போக்குவரத்து போலீஸ் பிரிவு டி.ஜி.பி., பிரபு சங்கர், சட்டம் மற்றும் ஒழுங்கை பின்பற்றும் போலீசாரும், சாலை விதிகளை மதிக்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்.
மாநிலத்தின் ஒவ்வொரு போலீசாரும், கட்டாயமாக சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என, நேற்று சுற்றோலை வெளியிட்டுள்ளார்.
