கருகிய நிலையில் ஆசிரியை உடல் மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
கருகிய நிலையில் ஆசிரியை உடல் மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
ADDED : ஏப் 07, 2026 05:31 AM

கலபுரகி: அரசு பள்ளி ஆசிரியையை கொடூர ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கலபுரகி மாவட்டம் கமலாப்பூர் தாலுகா கல்மூட் கிராமத்தில் உள்ள பீதர் நோக்கி செல்லும் சாலையில், நேற்று கருகிய நிலையில் பெண் உடல் ஒன்று கிடப்பதாக கமலாப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சாலையோரத்தில் மனித உடல் கருகிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் கடுமையாக துர்நாற்றம் வீசியது. போலீசார் விசாரணையை துவங்கினர்.
விசாரணையில், உயிரிழந்தது கலபுரகி ஆனந்த் காலனியை சேர்ந்த ஜோதி, 57, என்பது தெரிய வந்தது. இவர், பீதர் பால்கி தாலுகாவில் உள்ள வஞ்சர்கேட் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வந்தார்.
பீதரிலே வீடு எடுத்து தங்கியிருந்தார். வாரம் ஒரு முறை, தன் சொந்த ஊருக்கு வருகை தருவார். அப்படி இவர் கடந்த சனிக்கிழமை கலபுரகிக்கு வந்தார்.
மீண்டும் பீதருக்கு செல்வதற்காக கல்மூட் கிராமம் வழியாக பயணித்து உள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொடிய ஆயுதங்களால் அவரை தாக்கியுள்ளனர். அதில், அவர் உயிரிழந்து உள்ளார். பின், அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இருப்பினும், என்ன காரணத்திற்காக கொலை நடந்தது; யார் கொலை செய்தனர் என்பது தெரியவில்லை என, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
