தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'அயன்மேன்' போட்டியில் வென்ற போலீஸ் அதிகாரி சாதனை

 'அயன்மேன்' போட்டியில் வென்ற போலீஸ் அதிகாரி சாதனை

 'அயன்மேன்' போட்டியில் வென்ற போலீஸ் அதிகாரி சாதனை


ADDED : மார் 06, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச அளவிலான, 'அயன் மேன்' போட்டியில், போலீஸ் அதிகாரி ஒருவர் அபார சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய, கர்நாடகாவின் நான்காவது போலீஸ் அதிகாரி என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

பெலகாவி நகரில் ரிசர்வ் போலீஸ் படையில், எஸ்.ஐ.,யாக பணியாற்றுபவர் சங்கமேஷ், 29. இவர் கடந்த பிப்ரவரி, 22ம் தேதி, இலங்கையின், கொழும்பில் நடந்த, 'அயன் மேன் 70.3' போட்டியில் சாதனை படைத்து, இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார்.

560 போட்டியாளர்கள் கொழும்பில், 'ஒர்டு ட்ரைத்ளான் கார்ப்பரேஷன்' சார்பில் நடந்த போட்டியில், 50 நாடுகளின் 560 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இது, உடல் திறனை நிரூபிக்கும் கடினமான போட்டியாகும். இதில், இந்தியா சார்பில் போலீஸ் அதிகாரி சங்கமேஷ் பங்கேற்றார். இவர் சைக்கிளிங் செய்து, 90 கி.மீ., துாரத்தை, 2 மணி நேரம் 51 நிமிடத்தில் சென்றடைந்தார்.

ஹாப் மாரத்தான் போட்டியில் 21.1 கி.மீ., துாரத்தை, 2.15 நிமிடத்தில் அடைந்து இலக்கை எட்டினார். உடல் ரீதியில், மன ரீதியில் வலுவானவர் என்பதை நிரூபித்தார்.

காலை, 7:00 மணிக்கு போட்டியை துவக்கிய இவர், மதியம், 12:00 மணிக்கு முடித்தார். சைக்ளோன் மற்றும் முதலைகள் தொல்லையால், நீச்சல் போட்டியை ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்தனர்.

ஆனால், கர்நாடகாவின் சங்கமேஷ், நீச்சல் போட்டிக்கும் தயாராகவே இருந்தார். 'அயன் மேன்' போட்டியில் விருது வென்ற அவர், பெலகாவிக்கு வந்திறங்கிய போது, சக போலீசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் பூஷண் பொரசே, டி.சி.பி., நாராயணா பரமனி ஆகியோர், சங்கமேஷை பாராட்டி கவுரவித்தனர்.

இதற்கு முன், சர்வதேச அளவிலான அயன் மேன் போட்டியில், ஐ.ஜி.பி., சந்தீப் பாட்டீல், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முருகேஷ் சென்னண்ணவரா, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீசைல பாகூடா சாதனை செய்துள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற கர்நாடக போலீஸ் அதிகாரிகளில், சங்கமேஷ் நான்காவது நபர்.

சந்தீப் பாட்டீல், பெலகாவி எஸ்.பி.,யாக பணியாற்றியவர். ஸ்ரீசைல பாகூடா மற்றும் சங்கமேஷ் பெலகாவியிலேயே பணியாற்றுகின்றனர்.

மகிழ்ச்சி சங்கமேஷ் கூறியதாவது:

இலங்கை செல்வதற்கு முன், மைசூரில் கே,ஆர்.எஸ்., அணை பகுதியில், இரண்டு கி.மீ., நீச்சல், 80 கி.மீ., சைக்கிளிங், 20 கி.மீ., ரன்னிங் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதில், என் வயதுக்கான பிரிவில் பங்கேற்று, முதல் இடம் பிடித்தேன். இப்போது சர்வதேச அளவிலான, போட்டியில் சாதனை செய்திருப்பது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தினமும் என் அன்றாட பணிகளுடன், நீச்சல், ரன்னிங், சைக்கிளிங் பயிற்சி பெற்றேன். உயர் போலீஸ் அதிகாரிகள், என்னை ஊக்குவித்து உற்சாகப்படுத்தினர்.

சந்தீப் பாட்டீல், 2025ல் அயன் மேன் 140.6 கி.மீ., போட்டியில், சாதனை செய்தார். அவரால் உந்தப்பட்டு அயன்மேன், 70.3 கி.மீ.,ல் சாதனை செய்தேன். வரும் நாட்களில் அவரது சாதனையை எட்ட முயற்சிப்பேன். அதற்காக கடுமையாக பயிற்சி எடுக்கிறேன்.

பெரும்பாலான இளைஞர்கள், தீய பழக்கங்களுக்கு பலியாவது வருத்தம் அளிக்கிறது. இந்தியா இளைஞர்களின் நாடு. அவர்களே இந்நாட்டின் சொத்து.

எனவே அவர்கள் தீய பழக்கங்களில் இருந்து, விலகி நிற்க வேண்டும். போலீசார் என்றால் தொப்பை வயிறு என்ற கருத்து, பரவலாக உள்ளது.

அதை போக்க வேண்டும். போலீசார் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில், அக்கறை காட்ட வேண்டும். தினமும் ஒரு மணி நேரம், உடலை வருத்தி, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us