காஸ் சிலிண்டர் ஏஜென்சிக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ்
காஸ் சிலிண்டர் ஏஜென்சிக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ்
ADDED : ஏப் 03, 2026 03:56 AM

ஹாவேரி: ஹாவேரியில் காஸ் சிலிண்டர் ஏஜென்சி முன், 100க்கும் மேற்பட்டோர் குவிந்ததால், நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
மேற்காசியாவில் நடக்கும் போரால், பல மாவட்டங்களில் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், காஸ் சிலிண்டர் ஏஜென்சிகளின் முன், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அவ்வகையில், ஹாவேரி மாவட்டம் ஹுக்கேரி பகுதியில் உள்ள ஹெச்.பி., காஸ் சிலிண்டர் ஏஜென்சியின் முன், நேற்று 100க்கும் மேற்பட்டோர் காலி சிலிண்டர்களுடன் குவிந்தனர்.
அவர்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, வரிசையில் நின்று கொண்டிருந்த சிலர் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், வரிசையில் நின்றவர்களில் பலர், சிலிண்டரை முன்பதிவு செய்யாமல், நேரடியாக வரிசையில் நின்றது தெரிந்தது.
இதுகுறித்து, ஹாவேரி போலீசாரிடம் ஊழியர்கள் கூறினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வரிசையில் நின்றவர்களுடன் பேச்சு நடத்தினர்; வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சிலிண்டர் ஏஜென்சி முன் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
காஸ் சிலிண்டர் ஏஜென்சியின் மேலாளர் ஹனீப் கூறியதாவது:
சிலிண்டர் முன்பதிவு செய்தவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். முன்பதிவு செய்யாதவர்கள், உடனடியாக முன்பதிவு செய்ய வேண்டும். ஏஜென்சி முன் யாரும் கூட வேண்டாம். தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
