மகளை மறந்து சென்ற பெற்றோர் பாதுகாப்பாக ஒப்படைத்த போலீசார்
மகளை மறந்து சென்ற பெற்றோர் பாதுகாப்பாக ஒப்படைத்த போலீசார்
ADDED : ஜூன் 14, 2026 11:33 PM
சிக்கமகளூரு: கலசேஸ்வர சுவாமி கோவிலுக்கு வந்த தம்பதி, தங்களின், 4 வயது பெண் குழந்தையை மறந்து சென்றனர். குழந்தையை அப்பகுதியினர் பாதுகாத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவை சேர்ந்தவர் சிவசங்கர். இவர் தன் மனைவி மற்றும் 4 வயது மகளுடன், சிக்கமகளூரு மாவட்டத்துக்கு, காரில் சுற்றுலா வந்துள்ளார்.
கலசா தாலுகாவில் உள்ள, வரலாற்று பிரசித்தி பெற்ற கலசேஸ்வர சுவாமி கோவிலுக்கு, நேற்று முன்தினம் சென்றிருந்தனர்.
கலசேஸ்வர சுவாமியை தரிசனம் செய்த பின், ஹொரநாடுக்கு புறப்பட்டனர். செல்லும் அவசரத்தில் குழந்தையை மறந்து, காரில் ஏறினர்.
கோவில் வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுமி, தன் பெற்றோர் காரில் செல்வதை கண்டு பயந்து, அழுதபடியே காரின் பின்னால் ஓட துவங்கினார். ஆனால், கார் வேகமாக சென்றதால், செய்வதறியாது நின்றிருந்தது.
இதை கண்ட அப்பகுதியினர், சிறுமியை சமாதானம் செய்து, கலசா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது, சிறுமி தெளிவாக, தன் ஊரின் பெயர், கொள்ளேகால் என, கூறினார். அது மட்டுமின்றி, தன் தாய், தந்தையின் பெயர், பள்ளியின் பெயரையும் கூறினார்.
'எனக்கு அப்பா, அம்மா வேண்டும். அவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனக்கும் அவர்களை பிடிக்கும். ஆனால் என்னை இங்கேயே விட்டு சென்றுவிட்டனர். என்னை பெற்றோரிடம் அனுப்புங்கள்' என கூறி அழுதார்.
இதற்கிடையே, ஹொரநாடு அடைந்த பெற்றோர், காரில் இருந்து இறங்கும் போது தான், மகள் இல்லாதது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை, மறந்து விட்டு வந்ததை உணர்ந்தனர்.
உடனடியாக அவர்கள் கலசேஸ்வரா கோவில் நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். மகள் பாதுகாப்பாக இருப்பதை, அலுவலக ஊழியர்கள் கூறிய பின், நிம்மதி அடைந்தனர்.
உடனடியாக, 8 கி.மீ., தொலைவில் இருந்த கலசா போலீஸ் நிலையத்துக்கு சென்று, போலீசாருக்கும், அப்பகுதியினருக்கும் நன்றி கூறி, மகளை கொஞ்சி, முத்தமிட்டு அழைத்து சென்றனர்.
