வனத்தில் சுற்றிய வெளிநாட்டு நபர் கோவாவுக்கு அனுப்பிய போலீசார்
வனத்தில் சுற்றிய வெளிநாட்டு நபர் கோவாவுக்கு அனுப்பிய போலீசார்
ADDED : ஆக 22, 2026 11:19 PM
உத்தர கன்னடா: அடர்ந்த வனப்பகுதியில், நான்கு நாட்களாக சுற்றி கொண்டிருந்த வெளிநாட்டு நபரை, அப்பகுதியினர் மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை, பத்திரமாக கோவாவுக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தர கன்னடா மாவட்டம், எல்லாபுரா தாலுகாவின் மாகோடு காலனி மற்றும் சுற்றுப்பகுதி, அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. இத்தகைய வனத்தில் சந்தேகத்துக்கு இடமாக, வெளிநாட்டு நபர் ஒருவர், நான்கு நாட்களாக சுற்றி கொண்டிருந்தார்.
அப்பகுதியினர் நேற்று முன் தினம் இவரை கவனித்தனர். வீரமாருதி கோவில் அருகில், இவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர், மூலிகை செடிகள் குறித்து, ஆராய்ச்சி செய்வதற்காக டென்மார்க் நாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறினார்.
ஆனால் அவரிடம் வனத்துறையிடம் அனுமதி பெற்றதற்கான, எந்த ஆவணமும் இல்லை. எனவே, அவரை வனத்தில் இருந்து அழைத்து சென்று, எல்லாபுரா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த வெளிநாட்டு நபரிடம் ஆவணங்களை கேட்டனர். அவரிடம் பாஸ்போர்ட், விசா உட்பட, எந்த ஆவணங்களும் இல்லை. இதை பற்றி விசாரித்த போது, 'நான் டென்மார்க்கை சேர்ந்தவன். சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்தேன்.
கோவாவில் ஹோட்டல் ஒன்றில் தங்கினேன். மூலிகை தாவரங்கள் குறித்து, ஆராய்ச்சி செய்வதற்காக மலை மஹாதேஸ்வரா மலைக்கு சென்றேன்.
''அதன்பின் என்னிடம் பணம் இல்லாததால், 'லிப்ட்' கேட்டு மாகோடு வரை வந்தேன். என்ன செய்வது என தெரியாமல், வனத்தில் சுற்றி கொண்டிருந்தேன். என் பாஸ்போர்ட், மற்ற ஆவணங்கள் கோவா ஹோட்டல் அறையில் உள்ளன,'' என்றார்.
வெளி நாட்டு நபரிடம் வெறும் 70 ரூபாய் மட்டுமே இருந்தது. வங்கி கணக்கில் பணம் இருந்தும், மொபைல் போன் பழுதடைந்ததால், பணம் எடுக்க முடியவில்லை. அந்த நபரின் இயலாமையை புரிந்து கொண்ட எல்லாபுரா எஸ்.ஐ., ராஜசேகர் வந்தலி, அவருக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தார். தன் சொந்த பணத்தை கொடுத்து, பஸ்சில் ஏற்றி கோவாவுக்கு அனுப்பினார்.
