/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் சட்டவிரோதமாக வசிப்போரை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை
/
பெங்களூரில் சட்டவிரோதமாக வசிப்போரை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை
பெங்களூரில் சட்டவிரோதமாக வசிப்போரை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை
பெங்களூரில் சட்டவிரோதமாக வசிப்போரை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை
ADDED : செப் 05, 2025 11:07 PM
பெங்களூரு: விசா காலம் முடிந்தும், பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவரை கண்டுபிடிப்பதுடன், இவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்தவர்களின் மீதும், நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
வெளிநாட்டை சேர்ந்த பலர் கல்வி, தொழில், சுற்றுலா உட்பட பல காரணங்களுக்காக பெங்களூரு வந்து தங்குகின்றனர். இவர்களின் விசா காலம் முடிந்தாலும், சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லாமல், இங்கேயே வசிக்கின்றனர். இவர்களில் பலர் போதைப்பொருள் விற்பது, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இதையடுத்து, பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவரை கண்டுபிடிக்க போலீஸ் துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதே போன்று, இவர்களிடம் ஆவணங்கள் பெறாமலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலும், வாடகைக்கு வீடு கொடுத்த உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
ஏற்கனவே அம்ருதஹள்ளி, பாகலுார், சம்பிகேஹள்ளி, வித்யாரண்யபுரா போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கு, கொடிகேஹள்ளி, சிக்கஜாலா போலீஸ் நிலையத்தில், தலா இரண்டு வழக்குகள், எலஹங்கா நியூடவுன் போலீஸ் நிலையத்தில் மூன்று, கொத்தனுார் போலீஸ் நிலையத்தில் ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளன.
வெளிநாட்டு நபர்களுக்கு, வாடகைக்கு வீடு கொடுப்பது குறித்து, ஒயிட் பீல்டு மண்டல டி.சி.பி., புதிய நெறிமுறைகளை வெளியிட்டார். வீட்டு உரிமையாளர்கள், வெளிநாட்டினருக்கு வீடு வாடகைக்கு அளிக்கும்போது, அவர்களின் பாஸ்போர்ட், விசா பிரதியை பெற்றுக்கொள்ள வேண்டும். வாடகைக்கு அளிக்கும் முன்பு, அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்துக்கு, தகவல் கொடுக்க வேண்டும்.
விசா காலம் முடிந்திருந்தால், பார்போர்ட் இல்லையென்றாலோ, போலீசாரின் அனுமதி பெறாமலோ, வெளி நாட்டினருக்கு வீடு வாடகைக்கு அளிக்கக் கூடாது. சட்டப்படி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
வாடகைக்கு அளித்த பின், அவர்களின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, விதிமுறைகளில் கூறப்பட்டிருந்தது. இதை அனைத்து பகுதியினரும் பின்பற்ற வேண்டும். இதை மீறும் வீட்டு உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.