துனியா விஜய் வெளியிட்ட பதிவு மீட்டெடுக்க போலீசார் நடவடிக்கை
துனியா விஜய் வெளியிட்ட பதிவு மீட்டெடுக்க போலீசார் நடவடிக்கை
ADDED : ஏப் 22, 2026 01:41 AM

பெங்களூரு: 'ஜாம்பி போதை பொருள் பயன்பாடு பெங்களூரில் பரவுவதை தடுக்க வேண்டும்' என்று, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை நடிகர் துனியா விஜய் நீக்கி விட்டார். அந்த வீடியோவை மீட்டெடுக்கும்படி, இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு, பெங்களூரு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
பெங்களூரு எலஹங்கா பகுதியில் ஒரு வாலிபர், ஒரே இடத்தில் நீண்ட நேரம் சுயநினைவு இன்றி நிற்கும் வீடியோ, சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஜாம்பி போதை பொருளை உட்கொண்டதால், அந்த வாலிபர் சுயநினைவு இழந்ததாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக நடிகர் துனியா விஜய், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வீடியோ பேசி வெளியிட்டார். அந்த வீடியோவில், 'ஜாம்பி போதை பொருள் பெங்களூரில் பரவுவதாக தகவல் உள்ளது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார். இந்த வீடியோ வேகமாக பரவியது.
இதையடுத்து, 'பெங்களூரில் ஜாம்பி போதை பொருள் பயன்பாடு இல்லை' என்று, போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் விளக்கம் அளித்தார். சுயநினைவு இன்றி நின்ற வாலிபர் மது அருந்தியதாலும், அதன் பின் மருந்துகளை உட்கொண்டதாலும் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கமிஷனர் கூறி இருந்தார்.
வாலிபர் சுயநினைவு இன்றி நின்ற வீடியோவை வெளியிட்டவர், கூலி தொழிலாளி ஹேமந்த் குமார் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது; அவரும் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் ஜாம்பி போதை பொருள் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகர் துனியா விஜய், அந்த வீடியோவை மறுபகிர்வு செய்த முன்னாள் போலீஸ் அதிகாரி பாஸ்கர் ராவ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்தனர்.
நிலைமை வேறு விதமாக செல்வதை உணர்ந்த துனியா விஜய், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவை அழித்து விட்டார். அந்த வீடியோவை மீட்டெடுக்கும்படி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு, பெங்களூரு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
வீடியோ மீட்டெடுக்கப்பட்ட பின், விசாரணைக்கு ஆஜராகுமாறு துனியா விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.
