அரிசி கடத்தல் கும்பலை மிரட்டி பணம் பறித்த போலீஸ்காரர் கைது
அரிசி கடத்தல் கும்பலை மிரட்டி பணம் பறித்த போலீஸ்காரர் கைது
ADDED : மே 09, 2026 02:17 AM

பல்லாரி: சட்ட விரோதமாக அரிசி கடத்துவதாக கூறி, அரிசி வியாபாரியை மிரட்டி, மூன்று லட்சம் ரூபாய் பறித்த, பல்லாரி எஸ்.பி.,யின், 'கன்மேன்' எனும் போலீஸ்காரர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை கர்நாடகா அரசு இலவசமாக வழங்குகிறது. அரசு வழங்கும் அரிசியை, மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அண்டை மாநிலங்களுக்கு கடத்தி சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்வது நடக்கிறது.
குறிப்பாக, கர்நாடகா மாநிலம் பல்லாரி வழியாக, ஆந்திராவின் பல மாவட்டங்களுக்கு, ரேஷன் அரிசி கடத்தப்படுவதால், அதை தடுக்க பல்லாரி எஸ்.பி., சுமன் பன்னேகர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம், 28ம் தேதி, பல்லாரி டவுன் மோகா பகுதியில் வசிக்கும், அரிசி வியாபாரி சரபசய்யா என்பவர், இரண்டு லாரிகளில், ஆந்திராவுக்கு அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்தார்.
மோகா வனப்பகுதி சாலையில் அந்த லாரிகளை, மூன்று பேர் மறித்தனர். அதில் ஒருவர், 'நான் பல்லாரி எஸ்.பி.,யின், 'கன்மேன்'. அரிசியை நீங்கள் சட்ட விரோதமாக கடத்தி செல்வதாக புகார் வந்து உள்ளது' என்றனர்.
அரிசி கொண்டு செல்வதற்கான ஆவணங்களை சரபசய்யா, அந்த நபர்களிடம் காண்பித்த போதிலும், அதை ஏற்க, மூன்று பேரும் மறுத்தனர். 'லாரிகளை பறிமுதல் செய்வோம். ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் தான், லாரிகளை விடுவிப்போம்' என்று கூறி மிரட்டல் விடுத்தனர்.
இதனால் வேறு வழியின்றி சரபசய்யா, மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தார். மீதமுள்ள, இரண்டு லட்சம் ரூபாயை, சில நாட்களில் தருவதாக கூறி, அங்கிருந்து லாரிகளில் சென்றார். ஆனால், மேற்கொண்டு பணம் கொடுக்க விரும்பாத அவர், கடந்த 6ம் தேதி, மோகா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், எஸ்.பி.,யின் கன்மேன் எனும் போலீஸ்காரர் தேவராஜ் உட்பட மூன்று பேர், சரபசய்யாவை மிரட்டி பணம் பறித்தது தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு, மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
