/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதலியிடம் மோசடி போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
/
கள்ளக்காதலியிடம் மோசடி போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 20, 2025 09:45 PM

பெங்களூரு : கள்ளக்காதலியிடம் 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலீஸ்காரர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு தெற்கு சென்னப்பட்டணா எம்.கே.தொட்டி கிராமத்தில் வசிப்பவர், 32 வயது பெண். திருமணம் ஆனவர். இந்த பெண்ணுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் இடையில், குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு இருந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் சண்டை ஏற்பட்டது.
இதுகுறித்து 112 எண்ணுக்கு அழைத்து பெண் புகார் செய்தார். எம்.கே.தொட்டி போலீசார் சென்று சண்டையை தீர்த்து வைத்தனர். இந்நிலையில் பெண்ணின் மொபைல் நம்பரை எப்படியோ பெற்ற, போலீஸ்காரர் புட்டசாமி, பெண்ணிடம் பேசி பழகினார். இருவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
கணவர் இல்லாத நேரத்தில், பெண் வீட்டிற்கு சென்று அவருடன், புட்டசாமி உல்லாசமாக இருந்து உள்ளார். பல காரணங்களை கூறி பெண்ணிடம் இருந்து, 12 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாக பெண்ணுடன் பேசுவதை போலீஸ்காரர் தவிர்த்தார். இதனால் தான் கொடுத்த 12 லட்சம் ரூபாயை திரும்ப தரும்படி பெண் கேட்டு உள்ளார். இதற்கு புட்டசாமி மறுத்தார்.
அவர் மீது எம்.கே.தொட்டி போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் பெண் புகார் செய்தார். புட்டசாமி மீது வழக்குப் பதிவானது.
இதுபற்றி அறிந்த அவர் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டு தலைமறைவானார். புட்டசாமியை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று உத்தரவிட்டார்.