டிச., 21ல் போலியோ சொட்டு மருந்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
டிச., 21ல் போலியோ சொட்டு மருந்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
ADDED : டிச 18, 2025 07:05 AM

பெலகாவி: ''டிசம்பர் 21ல், தேசிய போலியோ சொட்டு ம ருந்து தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, போலியோ சொட்டு மருந்து போட வேண்டும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அறிவுறுத்தினார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் டிசம்பர் 21ல், தேசிய போலியோ சொட்டு மருந்து தினமாக கொண்டாடப்படும். மாநிலத்தில் 5 வயதுக்கு உட்பட்ட, 62,40,114 சிறார்களுக்கு, போலியோ சொட்டு மருந்து போட, இலக்கு நிர்ணயித்துள்ளோம். 5 வயதுக்கு உட்பட்ட, அனைத்து சிறார்களுக்கும் போலியோ சொட்டு மருந்து போடுவது கட்டாயம். இத்திட்டத்துக்காக 1.13 லட்சம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போலியோ சொட்டு மருந்து போடாத வீடுகளுக்கு சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறார்களுக்கு சொட்டு மருந்து போடப்படும். டிசம்பர் 21 முதல், 24 வரை போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடக்கும். முதல்வர் சித்தராமையா, மைசூரில் தன் அலுவலகத்தில் சொட்டு மருந்து போடும் பணியை துவக்கி வைப்பார்.
இந்தியா 14 ஆண்டுகளுக்கு முன், போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பக்கத்து நாடுகளில் போலியோ பாதிப்புள்ளவர்கள் இருப்பதால், நமது நாட்டுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. சிறார்களுக்கு சொட்டு மருந்து போடுவது அவசியம்.
போலியோ சொட்டு மருந்து போட, 33,158 பூத்கள் அமைக்கப்படுகின்றன. நடமாடும் பூத்களின் மூலம், கிராமங்கள், மக்கள் குடியிருப்புகளுக்கு சென்று, சிறார்களுக்கு சொட்டு மருந்து அளிக்கப்படும். கடந்த முறை இலக்கை தாண்டி, அதிகமான சிறார்களுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. இம்முறையும் இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
பூத்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில், சிறப்பு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன், வீட்டின் அருகில் உள்ள பூத்களுக்கு சென்று, சிறார்களுக்கு பெற்றோர் போலியோ சொட்டு மருந்து போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
