கடும் வெயிலுக்காக 'ஏசி ரூம்' விவாதத்தை கிளப்பிய பதிவு
கடும் வெயிலுக்காக 'ஏசி ரூம்' விவாதத்தை கிளப்பிய பதிவு
ADDED : ஏப் 24, 2026 04:08 AM

பெங்களூரு: கோடை காலத்தில் பெங்களூரின் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக, தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கிய இளம்பெண்,, அதுகுறித்து சமூகவலை தளத்தில் வெளியிட்ட வீடியோ கடும் விவாதத்தைத் துாண்டியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நகரில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவாகிறது.
சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் நிவாரணம் தேடி வருகின்றனர். இதற்கான ஒருவழியை, இன்ஸ்டாகிராம் பயனரான பிரியா பால், தனது வார இறுதியை வீட்டிற்குள்ளேயே கழிப்பதற்கான ஒரு அசாதாரணமான வழியைச் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ, 'இதற்காக மட்டுமே எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்தோம்' என்ற உரையுடன் துவங்குகிறது.
தன் தோழி மிஷ்கா பாலுடன் நாள் முழுவதும் குளிரூட்டியை அனுபவிப்பதற்காக ஹோட்டலில் அறை எடுத்தது முதல் இறுதியில், ஏசி யூனிட்டின் மீது கவனம் குவிக்கப்படுவது வரை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோ வைரலாகி, 85,000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 400க்கும் மேற்பட்ட விமர்சனங்களையும் பெற்றது.
'ஏசி வசதியுள்ள ஹோட்டல் அறையை முன்பதிவு செய்துள்ளீர்கள், ஒரு புதிய ஏசி வாங்க உங்களிடம் வசதி இல்லையா? ஏன்?' என்று துவங்கி ஏராளமான விமர்சனங்களை அந்த வீடியோ கிளப்பியது.
