பெங்களூரு: கர்நாடகாவில் 2024 ஏப்ரல் முதல் 2025 மே வரை, பள்ளி செல்லும் வயதுள்ள 5,072 சிறுமியர் கருவுற்றதாக, கர்நாடக மாநில சுகாதார துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சுகாதார துறையின் இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியம் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கர்நாடகாவில் 2024 ஏப்ரல் முதல் 2025 மே மாதம் வரை பள்ளிக்கு செல்லும் வயதுள்ள 31,663 சிறுமியர் கர்ப்பமாகி உள்ளனர். இவர்களில், 9 வயதில் 16 சிறுமியரும்; 10 வயதில் ஏழு பேரும்; 11 வயதில் நான்கு பேரும்; 12 வயதில் எட்டு பேரும் அடக்கம்.
தவிர, 13 முதல் 17 வயதுள்ள சிறுமியர் 5,037 பேரும்; 18 வயதுள்ள 26,393 பேரும்; 19 வயதுடைய இளம்பெண்கள் 198 பேரும் என, மொத்தம் 31,663 பேர் கர்ப்பம் அடைந்துள்ளனர்.
மாவட்டம் வாரியாக, அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 3,271, பெலகாவியில் 3,158, விஜயபுராவில் 2,278, ராய்ச்சூரில் 2012, மைசூரில் 1,623, பாகல்கோட்டில் 1,092, பல்லாரியில் 1,077, பீதரில் 1,016, சித்ரதுர்காவில் 1,246 பேர் கர்ப்பமாகி உள்ளனர்.
வறுமை, சமூக அழுத்தத்துக்கு தள்ளப்பட்ட சில குடும்பங்கள், குறிப்பாக பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா போன்ற வட மாவட்டங்களில், தங்கள் மகள்களை மிக இளம் வயதில் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு, 'பாலியல் துஷ்பிரயோகம், கல்வியின்மை மற்றும் சமூக பொருளாதார பாதிப்புகள் ஆகிய அதிகரித்து வருவதே குழந்தை திருமணங்கள் நடப்பதற்கு காரணம்' என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.