/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடலில் வலை வீசும் முதுகலை பட்டதாரி பிரதீப்தி
/
கடலில் வலை வீசும் முதுகலை பட்டதாரி பிரதீப்தி
ADDED : ஆக 17, 2025 10:13 PM

ஆழ்கடலில் சென்று மீன்பிடித்து, கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது, மீனவர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. தங்கள் பயணத்தில் அவர்கள் நிறைய கஷ்டத்தை சந்திக்க வேண்டும். கடல் மாதாவின் ஆசி இருந்தால் மட்டுமே, கடலுக்குள் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவர்.
முதுகலை பட்டம் வெயில், மழை எதையும் பொருட்படுத்தாமல் மீனவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக, கடலில் வலை வீசுகின்றனர். பெரும்பாலும் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் ஆண்களாக தான் இருப்பர். ஆனால் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் மங்களூரை சேர்ந்த இளம்பெண், கடலுக்கு மீன்பிடிக்க செல்வதுடன், மீ ன்சார்ந்த படிப்பில் முதுகலை பட்டமும் பெற்று உள்ளார். அந்த இளம்பெண்ணின் பெயர் பிரதீப்தி, 27.
தனது கடல் பயணம் குறித்து பிரதீப்தி கூறுவது புல்லரிக்க வைக்கிறது.
எனது தந்தை ஜெயபிரகாஷ், நைஜீரியாவில் துறைமுகத்தில் வேலை செய்கிறார். சிறு வயதில் இருந்தே கடல் அலையின் சத்தத்தின் கீழ் வாழ்ந்ததால், கடல் பற்றிய படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, மீன் சார்ந்த படிப்பு தான் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். இதுபற்றி தந்தையிடம் கூறிய போது மகிழ்ச்சி அடைந்தார். நிறைய ஊக்கம் அளித்தார்.
வலை வீச்சு இன்ஜினியரிங், டாக்டர் படிக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலோனார் ஆசையாக இருக்கும். ஆனால் எனக்கு அந்த படிப்பின் மீது விருப்பம் இல்லை. மங்களூரில் உள்ள மீன்வள கல்லுாரியில் முதுகலை பட்டம் பெற்று உள்ளேன். வாரத்திற்கு இரண்டு நாட்கள் மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்கு சென்று, மீன்பிடிக்க வலைவீசுகிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
கடலோர மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் ஒரே பெண் நான் தான். இதனால் சிலர் என்னை, பிரபலத்தை போன்று பார்க்கின்றனர். நானும் சாதாரண பெண் தான். பெண் என்பதால் கடலுக்குள் செல்லும் போது இயற்கை உபாதை கழிப்பது பெரிய கஷ்டமாக உள்ளது.
கடலுக்குள் செல்லும் போது தண்ணீர் குடிக்க மாட்டேன். மீன்பிடி தொழிலில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது என்று நினைக்கிறேன். மீனவர்கள் கடலுக்குள் இருந்து கஷ்டப்பட்டு கொண்டு வரும் மீனை, பேரம் பேசாமல் மக்கள் வாங்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -