ADDED : செப் 22, 2026 08:46 PM

பெங்களூரு: ''பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா அயோக்கியன்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் விமர்சித்துள்ளார்.
பா.ஜ., நடத்தும் நிகழ்ச்சிகள், போராட்டங்களுக்கு தலித் அமைப்பினர் இடையூறு செய்வதாகவும், நீல சால்வை அணிந்து வந்து போராட்டம் நடத்தும் தலித் தலைவர்களுக்கு, அம்பேத்கர் சிந்தனைகள் பற்றி சிறிதளவு அறிவு உள்ளதா என்றும், மைசூரு பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா கூறியிருந்தார்.
இதுகுறித்து, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
மைசூரு முன்னாள் எம்.பி.,யான பிரதாப் சிம்ஹா ஒரு அயோக்கியன். நீல சால்வை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி உள்ளது. அவர் ஒரு காவி சால்வை அணிந்து வந்தால், நாங்கள், 1,000 நீல சால்வை அணிந்து வருவோம்.
தலித் சங்கர்ஷ சமிதி பற்றி பிரதாப் சிம்ஹா ஏன் பேசுகிறார். வாயை மூடி கொண்டு இருக்க வேண்டும். இந்த நாட்டை கட்டியது தலித்துகள். இதனால் தான் நாடும், காங்கிரஸ் கட்சியும் தலித்துகளை கடவுள் போல நடத்துகின்றன. தலித்துகள் பற்றி பேசியதற்கு, பிரதாப் சிம்ஹா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
