/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் மேல்முறையீடு
/
ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் மேல்முறையீடு
ADDED : செப் 30, 2025 05:37 AM

பெங்களூரு: வீட்டு வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தனக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., ரேவண்ணா. இவர், தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோ, 2024 ஏப்ரலில் சமூக வலைதளங்களில் பரவியது. வெளிநாடு தப்பி ஓடிய அவர், மீண்டும் பெங்களூரு திரும்பியபோது, அவரை எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
புகார் அளித்த பெண், என் தோட்டத்து வீட்டில் இருந்தார். போலீசாரை கண்டதும் பயந்து ஓடிவிட்டதாக கூறினார். பின், போலீசார் தன்னை சிறப்பு விசாரணை குழுவின் பெங்களூரு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, புகார் அளிக்குமாறு கோரியதாக தெரிவித்துள்ளார். இதன்படி, பாதிக்கப்பட்ட பெண்ணை, பின் தொடர்ந்து சென்ற போலீசார், அவரை வலுக்கட்டாயமாக புகார் அளிக்க வற்புறுத்தி உள்ளனர்.
அப்பெண்ணை, 2021 ஜனவரி 1ம் தேதி முதல் 2022 ஜன., 31ம் தேதிக்குள் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 2024 மே 10ம் தேதி அன்று, பாதிக்கப்பட்ட பெண், பசவனகுடியில், பாலியல் வன்கொடுமை நடந்த இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். குற்றம் நடந்த படுக்கை, சோபா அவரிடம் காட்டப்பட்டது.
மேலும், ஆறாவது அரசு தரப்பு சாட்சியான லிங்கனமூர்த்தி, படுக்கையில் சில கறைகள் காணப்பட்டதாக கூறினார். படுக்கை துணிகள் மூன்று ஆண்டுகளாக துவைக்கப்படாமல் இருப்பது எப்படி சாத்தியம் என்பது குறித்து விசாரணை நீதிமன்றம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
அதுபோன்று 2024 மே 28 அன்று உள்ள பண்ணை வீட்டில் தொழிலாளர்கள் துாங்குவதற்காக கட்டப்பட்ட வீட்டில், சில துணிகள், முடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரி கூறினார்.
இருப்பினும் பாதிக்கப்பட்டவரை அங்கு அழைத்துச் செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர் இல்லாத நேரத்தில், புலனாய்வாளர் துணிகள், முடியை பறிமுதல் செய்தது மிகவும் தவறு. இதற்கு சட்டத்தில் இடமில்லை.
துணிகளில் விந்து கறைகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர், 2022ம் ஆண்டு வேலையை விட்டு, வெளியேறியதாகவும், எட்டாவது அரசு தரப்பு சாட்சி கூறினார்.
இரண்டாவது அறை பேட்டரிகள், காலி பெட்டிகள், பெயின்ட் டப்பாக்கள், கம்பளம் வைக்கப்பட்டிருந்த இடம் என்று கூறப்படுகிறது.
மூன்று ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த இந்த அறையில், விந்து கறைகள், முடியை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும். இந்த கேள்விகளை எழுப்புவதன் மூலம், விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு குறைபாடு உடையதாகும்.
கடந்த மாதம் ஆக., 2ம் தேதி, விசாரணை நீதிமன்றம், மனுதாரருக்கு ஆயுள் தண்டனையும், 11.60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதில், 11.25 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்கவும், மீதமுள்ள தொகையை, அரசு கணக்கில் செலுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே, மனுதாரர் பிரஜ்வலுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.