ADDED : ஆக 30, 2026 11:26 PM

பெங்களூரு: சிறையில் தன்னை வேறு அறைக்கு மாற்ற வேண்டுமென, ம.ஜ.த., கட்சியின் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் கோரிக்கைக்கு, சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
பாலியல் பலாத்காரம் வழக்கில் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். சிறையில் இவருக்கு சொகுசு வசதிகள் அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சில நாட்களுக்கு முன், சி.சி.பி., அதிகாரிகள், பரப்பன அக்ரஹாரா சிறையில் நடத்திய சோதனையில், பிரஜ்வல் அறையில் மொபைல் போன், பென் டிரைவ் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா சிறப்பு பாதுகாப்பு பிரிவில் இருந்து, சாதாரண கைதிகள் தங்கும் அறைக்கு மாற்றப்பட்டார். இந்த அறையில், 25 கைதிகளுடன் அவர் தங்கி உள்ளார்.
இந்நிலையில், இந்த அறையில் தங்குவதால் தனக்கு நோய்த்தொற்று, ஒவ்வாமை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், தன்னை வேறு அறைக்கு மாற்றுங்கள் என சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.
இதற்கு சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், நீதிமன்றத்தில் முறையிட பிரஜ்வல் திட்டமிட்டு உள்ளார்.
