/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரஜ்வல் ஜாமின் மனு ஜூன் 20க்கு ஒத்திவைப்பு
/
பிரஜ்வல் ஜாமின் மனு ஜூன் 20க்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 17, 2025 07:55 AM

பெங்களூரு : வேலைக்கார பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையை, கர்நாடக உயர் நீதிமன்றம், ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
வேலைக்கார பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட, ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இவரது ஜாமின் மனுக்கள், தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் பிரபுலிங்க நவதாகி வாதிட்டதாவது:
மாநிலத்தில் முக்கியமான வழக்காக இருப்பதாகவும், பிரஜ்வல் தலைமறைவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அவரின் முந்தைய ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரஜ்வலால் அவரது தந்தை ரேவண்ணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் ரேவண்ணா மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கில் 157 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இருவருக்கும் இடையேயான குற்றச்சாட்டுகள் பிரிக்கப்படவில்லை. இதனால் மனுதாரர் சிக்கலில் உள்ளார். அதேவேளையில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கோரும் மாநில அரசின் நடவடிக்கை அதிருப்தி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு சார்பில் சிறப்பு வக்கீல் ஜெகதீஷ் வாதிடுகையில், ''பிரஜ்வலுக்கு எதிராக நான்கு பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் இரண்டு வழக்குகளில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. அவை ஆரம்ப கட்டத்தில் உள்ளன. ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், வாதம் செய்ய அவகாசம் வேண்டும்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கிருஷ்ண குமார், ''பிரஜ்வல் மீதான வழக்கு விசாரணை தாமதமாகி வருவது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அரசு தாக்கல் செய்த ஆட்சேபனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனுதாரரின் மனு மீதான விசாரணை, ஜூன் 20ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.