UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 04:32 PM
– நமது நிருபர் –
என்ன அழகு ... எத்தனை அழகு ... கோடி மலர் கொட்டிய அழகு என்ற பாடல் வரிக்கு ஏற்ப, மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலத்தில், சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும், தங்க அம்பாரியை யானை சுமந்து வருவதை காண, கண் கோடி வேண்டும். சாமுண்டீஸ்வரி வீற்றிருக்கும், தங்க அம்பாரியை சுமந்து வரும் யானை என்றாலே, அதற்கு எப்போதும் ராஜ மரியாதை தான். யானைக்கு மட்டுமின்றி அதன் பாகன், பராமரிப்பாளர்களுக்கு அளிக்கப்படும் கவுரவமும் உயரியதாகவே இருக்கும்.
கடந்த 2020 முதல் 2026ம் ஆண்டு வரை தங்க அம்பாரியை, அபிமன்யு என்ற யானை சுமந்தது. அதற்கு 60 வயது ஆகி விட்டதால், அம்பாரி சுமப்பதில் ஓய்வு அளிக்கப்பட்டது.
வரலாற்றில் இடம்
இதனால் அம்பாரி சுமக்கும் புதிய யானை எது என்று, மைசூரு மக்களிடம் ஆர்வம் எழுந்தது. இந்த விஷயத்தில் வனத் துறையினரும் சஸ்பென்ஸ் வைத்தனர்.
தசராவில் பங்கேற்கும் பிரசாந்த், மகேந்திரா, தனஞ்ஜெயா, சுக்ரீவா, ஏகலவ்யா ஆகிய 5 யானைகளை வனத்துறையினர் தேர்வு செய்து, மர அம்பாரியை சுமக்கும் பயிற்சி கொடுத்தனர்.
பிரசாந்த், மகேந்திரா, தனஞ்ஜெயா ஆகிய 3 யானைகளில், ஒரு யானைக்கு அம்பாரி சுமக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், மகேந்திராவுக்கே அதிக வாய்ப்பு என்றும் பேசப்பட்டது. ஆனாலும் இரண்டு முறை மர அம்பாரியை சுமக்கும் பயிற்சியில், மகேந்திரா தோற்று போனதால், அம்பாரி சுமக்கும் வாய்ப்பை இழந்தது.
தனஞ்ஜெயா யானையும், ஸ்ரீரங்கப்பட்டணா தசராவில் அம்பாரி சுமக்க தேர்வானதால், பிரஷாந்த், 54, யானைக்கு அம்பாரி சுமக்கும் வாய்ப்பு கிட்டியது.
இந்த யானை குடகு மாவட்டம் துபாரே யானைகள் முகாமில் பராமரிக்கப்படுகிறது. இதுவரை நடந்த தசராக்களில் ஜம்பு சவாரியை மத்திகோடு அல்லது பல்லே முகாம்களை சேர்ந்த யானைகள் தான் சுமந்து வந்தன.
இம்முறை பிரஷாந்த் தேர்வாகி இருப்பதன் மூலம், 416 ஆண்டு கால தசரா வரலாற்றில், துபாரே யானைகள் முகாமும் இடம் பிடித்துள்ளது.
வித்தை காட்டும் கில்லாடி
இம்முறை இன்னொரு அதிசயம் என்னவென்றால், துபாரே முகாமில் இருந்து வந்த தனஞ்ஜெயா யானை, ஸ்ரீரங்கப்பட்டணா தசராவில் மர அம்பாரியை சுமந்து சென்றது.
பிரஷாந்த் யானையின் பாகன் சின்னப்பா; தனஞ்ஜெயா யானையின் பாகன் பாஸ்கர். சின்னப்பாவின் மகன் தான் பாஸ்கர் என்பதும் கூடுதல் சிறப்பு.
பொதுவாக வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு செல்வோர், இந்த இடத்திற்கு அவ்வளவு எளிதில் வந்து விடவில்லை என்று கூறுவர். இப்படி கூறுவது இம்முறை பிரஷாந்துக்கு கனகச்சிதமாக பொருந்தி உள்ளது. தசராவில் அம்பாரியை சுமக்கும் பொறுப்பு, பிரஷாந்த்துக்கு உடனடியாக கிடைக்கவில்லை. மைசூரு தசரா ஊர்வலத்தில் கடந்த 18 ஆண்டுகளாக பிரஷாந்த் பங்கேற்றுள்ளது. ஊர்வலத்தின் போது பல ரோல்களை முன்நின்று செய்துள்ளது.
சகிப்புதன்மை, கம்பீரமாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் நடப்பதில் கில்லாடி. இத்தகைய வித்தையின் மூலம் தான், ஜம்பு சவாரி சுமக்க தேர்வாகி உள்ளது.
காட்டு யானைகளை பிடிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படும் பிரஷாந்த், சிறைபிடிக்கப்பட்டதும் திமிரும் காட்டு யானைகளை அன்பால் கட்டிபோடுகிறது. இதிலும் பிரஷாந்துக்கு பின்னணி உள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு காலகட்டம் அது; ஷிவமொக்காவின் கரேகொப்பா கிராமத்தில் அட்டகாசம் செய்த காட்டு யானை தான் இந்த பிரஷாந்த். அப்போது பிரஷாந்த்திற்கு 21 வயது தான்.
மயக்க மருந்து செலுத்தி அதை பிடித்த வனத்துறையினர், துபாரே முகாமுக்கு கொண்டு வந்து மர கூண்டில் அடைத்தனர்.
முதலில் ஆக்ரோஷமாக இருந்த பிரஷாந்த், நாட்கள் செல்ல, செல்ல கும்கியாக மாற அனுமதித்தது. பாகன்கள் அன்பினால் தனது முரட்டு குணத்தை மாற்றி கொண்டது. காட்டு யானைகள் தாக்கும் போது பின்வாங்காமல் நேருக்கு நேர் மோதும் பயிற்சியும் கொடுக்கப்பட்டது.
தினமும் 600 முதல் 700 கிலோ பசுந்தீவனங்களை உட்கொண்டு, 5,100 கிலோ எடையில் இருக்கும் 54 வயது குழந்தை தான் இந்த பிரஷாந்த். இதற்கு ஒரு ராயல் சல்யூட்.
தங்க அம்பாரி, அதில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன் விக்ரம், மணல் மூட்டை என 1,100 கிலோ எடையை, ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, பிரஷாந்த் யானை சுமக்கவுள்ளது.
