ADDED : ஜூலை 24, 2025 11:16 PM
ஹென்னுார்: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவம், 25, பெயின்டர். இவரது மனைவி சுமனா, 22. இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பெங்களூரு தனிசந்திராவில் வாடகை வீட்டில் வசித்தனர். சுமனா கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று காலை சிவம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, சுமனா அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். சிவம் வீட்டில் இல்லை.
தகவல் அறிந்த ஹென்னுார் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சுமனா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சமையல் அறையில் சென்று பார்த்தபோது, ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக 'முட்டை பிரின்ஜி' இருந்தது. இதை தயார் செய்து சிவம் சாப்பிட்டு உள்ளார்.
சுமனாவின் உடலில் எந்த காயமும் இல்லை. ஆனால் அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து, காய்ந்து போனதற்கான அடையாளம் இருந்தது. சுமனாவின் சாவு மர்மமாக இருப்பதால், ஹென்னுார் போலீசார் மர்ம சாவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள சிவத்தை தேடிவருகின்றனர்.