/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பதவியை விட்டு தரும்படி மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கடி?: இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்., மேலிடம் திட்டம்
/
பதவியை விட்டு தரும்படி மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கடி?: இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்., மேலிடம் திட்டம்
பதவியை விட்டு தரும்படி மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கடி?: இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்., மேலிடம் திட்டம்
பதவியை விட்டு தரும்படி மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கடி?: இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்., மேலிடம் திட்டம்
ADDED : மே 16, 2025 11:00 PM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு உள்ளது. இம்மாதம் 20ம் தேதி, அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டில், சித்தராமையா அரசின் இரண்டு ஆண்டு சாதனை மாநாடு நடத்த, அரசு தயாராகிறது.
இதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றன. ஒரு லட்சம் மக்களை திரட்ட காங்கிரஸ் கட்சியினர் களத்தில் இறங்கி உள்ளனர்.
புது ரத்தம்
இதற்கிடையே அமைச்சரவைக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்; சரியாக பணியாற்றாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, முதல்வர் சித்தராமையாவுக்கு அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் எம்.எல்.ஏ.,க்கள் வழக்கம் போல் நெருக்கடி கொடுக்கின்றனர்.
கடந்த அக்டோபர், நவம்பரிலேயே அமைச்சரவையை மாற்றி அமைக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டது. அமைச்சரவையில் இருந்து யாரை நீக்குவது, யாரை சேர்ப்பது என்ற பட்டியலும் தயாராக இருந்தது. ஆனால் முதல்வர் சித்தராமையா விருப்பப்படவில்லை.
அமைச்சரவையில் பெரும்பாலும், சித்தராமையாவின் ஆதரவாளர்களே உள்ளனர். இவர்களை பதவியில் இருந்து நீக்குவதில், முதல்வருக்கு உடன்பாடு இல்லை. இரண்டு ஆண்டு ஆட்சி பொறுப்பு நிறைவடைந்த பின் ஆலோசிக்கலாம் என, கை கழுவியதால் பதவி எதிர்ப்பார்ப்பவர்கள் வாயை மூடிக்கொண்டனர்.
மீண்டும் துளிர்
அரசுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைய, இன்னும் சில நாட்களே உள்ளன. அமைச்சர் பதவி மீது கண் வைத்துள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஆசை மீண்டும் துளிர்விட்டுள்ளது. அமைச்சரவையை மாற்றி அமைத்தே ஆக வேண்டும் என, முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர்.
ஹொஸ்பேட்டில் இரண்டாண்டு சாதனை மாநாடு முடிந்தவுடன், அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கான வேலையை துவங்கும்படி, ஏற்கனவே சிலர் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, சில அமைச்சர்கள் மட்டுமே, சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். தங்கள் துறையில் மாற்றங்கள் கொண்டு வருகின்றனர்.
தங்கள் தொகுதியில் மட்டும் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர். 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எதையும் செய்யவில்லை. பெயரளவுக்கு பதவியில் உள்ளனர். கட்சி தொண்டர்களையும் சந்திப்பது இல்லை.
புத்துணர்ச்சி
இது போன்றவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை சேர்த்து அமைச்சரவைக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு இன்னும் மூன்று ஆண்டு ஆட்சிக் காலம் உள்ளது. நாட்கள் உருண்டோடி விடும். சட்டசபை தேர்தல் வந்துவிடும். அரசின் இமேஜை உயர்த்த வேண்டிய கட்டாயமும், காங்கிரஸ் மேலிடத்துக்கும் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, மக்களுக்கு இடையே நின்று பணியாற்றும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் திறன் கொண்ட, அமைச்சர்கள் படையை உருவாக்க விரும்புகிறது.
சில மூத்த அமைச்சர்களின் மனதை கரைத்து, இளையவர்களுக்கு விட்டுத்தரும்படி செய்ய முயற்சிக்கிறது. ஏற்கனவே நாகேந்திரா ராஜினாமாவால், ஒரு அமைச்சர் இடம் காலியாக உள்ளது.
இந்த இடம் உட்பட எட்டு முதல் 10 அமைச்சர் இடங்களை காலி செய்து, மூத்தவர்கள், இளைஞர்கள் கலந்த அமைச்சரவை உருவாக்குவது, மேலிடத்தின் எண்ணமாகும்.
பதவிக்கு ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்த சில அமைச்சர்கள், தங்களின் இரண்டு ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டு, அறிக்கை தயாரித்து காங்., தேசிய முதன்மை செயலர் வேணுகோபால், மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரிடம் தாக்கல் செய்துள்ளனர்.
'நாங்கள் சிறப்பாக பணியாற்றுகிறோம். எங்களை நீக்கக் கூடாது' என, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்றாடுதல்
மற்றொரு பக்கம், அமைச்சர் பதவிக்காக காத்திருக்கும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் அவ்வப்போது டில்லிக்கு சென்று, 'அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஏற்கனவே பதவியை அனுபவித்த மூத்த அமைச்சர்கள், பதவியை தியாகம் செய்யட்டும், அவர்களின் அனுபவத்தை கட்சிக்கு தாரை வார்க்கட்டும்.
'இனியாவது எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். சட்டசபை தேர்தலின்போது, எங்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதி அளித்தீர்கள். அதை இப்போது நிறைவேற்றுங்கள்' என, மன்றாடுகின்றனர்.
இரண்டு ஆண்டு சாதனை மாநாடு முடிந்த கையோடு, அமைச்சரவை மாற்றத்துக்கான பணியை, காங்., மேலிடம் கையில் எடுக்கும் என, கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நாள் நிறைவேறும்!
தங்களின் தலைவர் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, தொண்டர்களுக்கு இருக்கும். அது போன்று என் ஆதரவாளர்களுக்கும் உள்ளது. அவர்களின் ஆசை விரைவில் நிறைவேறும் என, நம்புகிறேன். அனைவருக்கும் ஆசை இருப்பது சகஜம். அது என்றாவது ஒருநாள் நிறைவேறும்.
- தன்வீர் செய்ட், எம்.எல்.ஏ.,
நம்பிக்கை
அமைச்சரவைக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். அரசுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அமைச்சராக விரும்பும் பலர் உள்ளனர். கடந்த முறை எனக்கு அமைச்சராகும் வாய்ப்பு கை நழுவியது. இம்முறை வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன்.
- சலீம், எம்.எல்.சி.,
மேலவை கொறடா