/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரதமர் மோடி இன்று உடுப்பி வருகை
/
பிரதமர் மோடி இன்று உடுப்பி வருகை
ADDED : நவ 28, 2025 05:52 AM

உடுப்பி: உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் இன்று நடக்கும் கீதா பாராயணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி உடுப்பி வருகிறார்.
உடுப்பி டவுனில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் இன்று, கீதா பாராயணம் எனும் பகவத் கீதையை வாசிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இன்று காலை, 11:05 மணிக்கு சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி மங்களூரு வருகிறார்.
அங்கிருந்து உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். பகல் 11:35 மணிக்கு உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை ரோடு ஷோ நடத்துகிறார்.
சாலையின் இருபுறமும் நின்று பிரதமருக்கு, மக்கள், கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
பின், கிருஷ்ணர் கோவிலுக்கு செல்லும் பிரதமர், கீதா பாராயணத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை திறந்து வைக்கிறார்.
ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெறுகிறார். பின், ஹெலிகாப்டரில் மீண்டும் மங்களூரு சென்று, அங்கிருந்து கோவா செல்கிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி, உடுப்பி நகரம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, கோவிலுக்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உடுப்பி, மல்பே, மணிப்பால் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி, துவக்க பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
பிரதமரை வரவேற்கும் விதமாக, உடுப்பி டவுன் முழுதும் வரவேற்பு பேனர்கள், காவி கொடிகள் வைக்கப்பட்டு உள்ளன.

