ADDED : மே 06, 2026 11:54 PM

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி, மே 10ம் தேதியன்று பெங்களூருக்கு வருகை தருகிறார். 'ஆர்ட் ஆப் லிவிங்'கின் 45வது ஆண்டு விழாவில் பங்கேற்கவுள்ளார்.
'ஆர்ட் ஆப் லிவிங்' அமைப்பின் 45ம் ஆண்டு விழாவுடன், அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பெங்களூரின், கனகபுரா சாலையில் உள்ள ஆர்ட் ஆப் லிவிங் ஆசிரமத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, மே 10ல் பெங்களூரு வருகை தருகிறார். நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர், ஆசிரம வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தியான மந்திரை திறந்து வைக்கிறார்.
ஆர்ட் ஆப் லிவிங் அமைப்பு, கடந்த 45 ஆண்டுகளாக யோகா, தியானம், ஆன்மிக கல்வியுடன், சமூக பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. ஆறுகள், ஏரிகள் சீரமைப்பு, இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, மீட்பு பணிகளில் ஈடுபடுவது என, பல்வேறு சேவைகளை செய்கிறது. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
