ADDED : மே 25, 2026 10:26 PM
ஸ்ரீராமபுரம்: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய, தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சந்திரய்யா, 59. இவர், பள்ளியில் 8ம் வகுப்பு படித்த 13 வயது மாணவியை, கடந்த ஓராண்டாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி வெளியே சொல்ல கூடாது என்றும் மிரட்டி உள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
உடல் பரிசோதனை செய்த போது, மாணவி ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் கேட்ட போது, தலைமை ஆசிரியர் மிரட்டி பலாத்காரம் செய்தது பற்றி கூறினார்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், ஸ்ரீராமபுரம் போலீசார், 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து கடந்த 22ம் தேதி சந்திரய்யாவை கைது செய்தனர். விசாரணைக்கு பின், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
