சிறைகளில் மருந்துகள் பற்றாக்குறை கைதிகள் பரிதவிப்பு
சிறைகளில் மருந்துகள் பற்றாக்குறை கைதிகள் பரிதவிப்பு
ADDED : ஜூலை 15, 2026 11:42 PM
பெங்களூரு: மருந்துகள் பற்றாக்குறையால், கர்நாடக சிறைகளுக்கு மருந்துகள் வினியோகம், 40 சதவீதம் முதல், 50 சதவீதம் குறைந்துள்ளது. சிறையில் நோயால் பாதிக்கப்படும் கைதிகள், மருந்துகள் இல்லாமல் பரிதவிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
கர் நாடகாவில் அரசு மருத்துவமனைகளில், கடுமையான நோய்களுக்கு தேவையான மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் சீட்டு எழுதி கொடுத்து, வெளியே வாங்கி வரும்படி, நோயாளிகளின் குடும்பத்தினரிடம் கூறுகின்றனர்.
மருந்துகள் பற்றாக்குறை காரணமாக, சிறைகளில் கைதிகளின் சிகிச்சைக்கு வழங்கப்படும் மருந்துகளின் அளவும் குறைந்துள்ளது. இதனால் கைதிகள் பாதிப்படைந்துள்ளனர்.
இதற்கு முன், மாநிலத்தின் அனைத்து சிறைகளுக்கும், மருந்துகள் வினியோகிப்பது, ஆம்புலன்ஸ் உட்பட, கைதிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் பொறுப்பு, சிறை மேம்பாட்டு துறையிடம் இருந்தது.
கைதிகளுக்கு சிகிச்சை வசதி செய்யும் பொறுப்பை நிர்வகிப்பதால், சிறை அதிகாரிகளுக்கு பணிச்சுமையை அதிகரிக்கிறது. பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொறுப்பு, சுகாதாரத்துறை சார்ந்ததாகும். எனவே சிறைகளில் கைதிகளுக்கு, மருத்துவ சேவை அளிக்கும் பொறுப்பை, இதே துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியது.
மனி த உரிமைகள் ஆணையத்தின் சிபாரிசு அடிப்படையில், கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொறுப்பை, சுகாதாரத்துறையிடம் அரசு ஒப்படைத்தது. குற்ற வழக்குகளில் கைதாகி, சிறைக்கு வரும் கைதிகளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிப் பது, அரசின் கடமையாகும்.
சிறை மருத்துவமனைகளில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால், வெளியே உள்ள மருத்துவமனைகளில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாதந்தோறும் கைதிகளின் நோய்களுக்கு தகுந்தார் போல மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் சிபாரிசு செய்வர். நீரிழிவு, ரத்த அழுத்தம் உட்பட, அனைத்து நோய்களுக்கும் மருந்துகள் உள்ளன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, சிறைகளுக்கு வரும் மருந்து, மாத்திரைகள் அளவு 40 முதல், 50 சதவீதம் குறைந்துள்ளது.
காய்ச்சல், சளி மாத்திரைகளே இல்லை. சரியான நேரத்தில் ஆம்புலன்சும் வருவது இல்லை. சில நாட்களுக்கு முன், உள் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் ஆய்வு செய்ய சென்ற போது, நோயாளிகள் மருந்துகள் பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் பிரச்னை குறித்து விவரித்தனர்.
இது குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிறைகளில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது உண்மை தான். சரியாக மருந்துகள் வினியோகிக்காத காரணத்தால், கைதிகளின் இறப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இரண்டு ஆண்டுகளில், உடல் நிலை பாதிப்பால் 126 கைதிகள் இ றந்தனர். சிறைகளில் மருந்துகள் பற்றாக்குறை குறித்து, சுகாதாரம், குடும்ப நலத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். உள்துறை அமைச்சரிடமும் தெரிவித்துள்ளோம்.
சிறை அதிகாரிகள் மனிதநேயம் அடிப்படையில், தங்களின் சொந்த செலவில் மருந்துகள் வாங்கி கொடுத்து, கைதிகளின் உயிரை காப்பாற்றுகின்றனர். அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் உதவுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
