ADDED : ஜூன் 08, 2026 11:27 PM
பெங்களூரு: டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பதால், கர்நாடகாவில் தனியார் பஸ் கட்டணம் ஐந்து முதல் எட்டு சதவீதம் உயர்த்தப்படுகிறது. இன்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.
இது குறித்து, மாநில தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் குயிலாடி சுரேஷ் நாயக், நேற்று அளித்த பேட்டி:
டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. வாகனங்களின் நிர்வகிப்பு செலவு, உதிரி பாகங்களின் விலை அதிகரித்துள்ளது.
ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பஸ் போக்குவரத்து தொழில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
மாநில அரசு ஓராண்டுக்கு முன், டீசல் மீதான வரியை, லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகரித்தது. மத்திய அரசும் நான்கு கட்டங்களில், டீசல் விலையை உயர்த்தியது.
வாகனங்களை பழுது பார்க்கும் செலவும் அதிகரித்துள்ளது. அன்றாட நிர்வகிப்பு செலவு, கணிசமாக உயர்ந்துள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம், இன்சூரன்ஸ், சாலை வரி போன்றவையும் சுமையாக உள்ளது.
பயண கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசிடமும் ஒப்புதல் கிடைத்துள்ளது. பஸ் பயண கட்டணம் ஐந்து முதல் எட்டு சதவீதம் உயர்த்தப்படுகிறது. நாளை (இன்று) முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயண கட்டண சலுகை, இனியும் நீடிக்கும். மாணவர்களுக்கு கூடுதல் சுமை இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
