/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமுண்டி மலையில் தனியார் வாகனங்களுக்கு தடை
/
சாமுண்டி மலையில் தனியார் வாகனங்களுக்கு தடை
ADDED : மே 07, 2025 11:11 PM

மைசூரு: கன்னட ஆடி மாதம் துவங்க உள்ளதால், சாமுண்டி மலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.
கன்னட ஆடி மாதம், ஜூனில் துவங்க உள்ளது. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில், சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரியை தரிசிக்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவர்.
அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து, நேற்று மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தலைமையில் ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
ஆடி மாதத்தில் ஜூன் 27, ஜூலை 4, 11, 18 ஆகிய நான்கு வெள்ளிக் கிழமைகளிலும், ஜூலை 17ம் தேதி அம்மனின் பிறந்த நாளான வர்தந்தி நாளிலும் தனியார் வாகனங்கள், மலைக்கு செல்ல அனுமதி இல்லை.
கார்கள், இரு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், லலித மஹால் ஹோட்டல் அருகில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த வேண்டும். அங்கிருந்து, பொது மக்களுக்கு அரசு பஸ் வசதி செய்து கொடுக்கப்படும்.
தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும். மலையில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர், துாய்மையை கடைபிடிக்க மைசூரு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படிக்கட்டுகளில் மின் விளக்குகள் பழுதாகியிருந்தால் அதை சரி செய்ய வேண்டும். கோவில்களில் மின் அலங்கார பணிகளை செஸ்காம் அதிகாரிகள் மேற்கொள்வர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், மைசூரு மாநகராட்சி கமிஷனர் ஷேக் தன்வீர் ஆசிப், டி.சி.பி., முத்துராஜ், சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணைய செயலர் ரூபா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கன்னட ஆடி மாதத்தில் சாமுண்டி மலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன், கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.

