/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்த விவகாரம்: மத்திய அரசு மீது பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு
/
அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்த விவகாரம்: மத்திய அரசு மீது பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு
அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்த விவகாரம்: மத்திய அரசு மீது பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு
அமெரிக்கா செல்ல அனுமதி மறுத்த விவகாரம்: மத்திய அரசு மீது பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 19, 2025 11:20 PM

பெங்களூரு: அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச உயிரி மாநாட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவின் வளர்ச்சியை தடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, அமைச்சர் பிரியங்க் கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
பாரீஸ் நாட்டில் நடந்த விமான கண்காட்சி, அமெரிக்காவின் பாஸ்டனில் நடக்கும் சர்வதேச உயிரி மாநாடு, சான்பிரான்சிஸ்கோவில் நடக்கும் வடிவமைப்பு ஆட்டோமேஷன் மாநாட்டில் கலந்து கொள்ள, கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே மற்றும் அவரது துறை அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு சென்றனர்.
பாரீஸ் விமான கண்காட்சியை முடித்துவிட்டு, கடந்த 17ம் தேதி அமெரிக்கா புறப்பட தயாராகினர். அப்போது அமெரிக்கா செல்ல பிரியங்க் கார்கேவுக்கு மட்டும், மத்திய அரசு அனுமதி மறுத்தது.
அவருடன் சென்ற அதிகாரிகளுக்கு அனுமதி கிடைத்தது. இதனால் வேறு வழியின்றி பாரீசில் இருந்து பிரியங்க் கார்கே பெங்களூருக்கு புறப்பட்டார்.
பெங்களூரு விமான நிலையத்தில் நேற்று காலை அவர் அளித்த பேட்டி:
உற்பத்தி மையம்
பாரீசில் இருந்து அமெரிக்கா செல்ல, மத்திய அரசு எனக்கு அனுமதி மறுத்தது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவர்கள் அனுமதி மறுத்தது கூட பிரச்னை இல்லை. ஆனால் அதற்கு சரியான காரணம் இருக்க வேண்டும். கர்நாடக மின்னணு உற்பத்தி மையமாக உள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் பல துறை முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்த்துள்ளோம். 'மேக் இன் இந்தியா', 'மேட் இன் இந்தியா' என்று மத்திய அரசு பேசுகிறது. இதற்கு அடித்தளமே கர்நாடகா தான். இங்கிருந்து தான் நிறைய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் வளர்ச்சி, கர்நாடகாவில் இருந்து தான் துவங்குகிறது.
தாண்டியா நடனம்
அமெரிக்காவுக்கு நான் தாண்டியா நடனம் ஆட செல்லவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறோம். மாநிலத்திற்கு முதலீடுகள் வருவதை உறுதி செய்வது எங்கள் பொறுப்பு. கர்நாடகா பயனடைந்தால், முழு தேசமும் பயன்பெறும்.
இந்திய பொருளாதாரத்தின் உந்து சக்தியே கர்நாடகா தான். அமெரிக்கா செல்ல எனக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது அநீதி. நானும், தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலும், முந்தைய அமெரிக்க பயணத்தின்போது 35,000 கோடி முதல் 40,000 கோடி ரூபாய் வரை முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்து வந்தோம்.
கர்நாடகாவின் வளர்ச்சியை தடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். முதல்வர் சித்தராமையாவிடம் ஆலோசனை நடத்துவேன்.
இவ்வாறு கூறினார்.